யாளி
அமிர்தம் தொகுதி 1, நிவேதிதா புத்தகப் பூங்கா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், சென்னை – 75, பக்கம் 184, விலை 90 ரூ.
‘ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா’ என்று நம்மிடையே கூற்றொன்று உண்டு. ஒரு சாண் வயிறுக்கு படித்தவன், பாமரன், ஏழை, பணக்காரன் என்கிற எந்தப் பேதமும் இல்லை. பிறப்பு, இறப்புக்கு நடுவில் அனைவருக்கும் பொதுவானதான உணர்வு பசி. மொத்தம் இத்தொகுப்பில் உள்ள 14 சிறுகதைகளும் 14 ரகம். அத்தனையும் தனி ரகம். குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மறக்கடிப்பதற்காகச் செய்யும் முயற்சிகளும், அதற்காகத் தாய் படும் அவஸ்தைகளையும் எழுதிய சு. வேணுகோபாலின் ‘மோகினி’ கண்ணில் நீரை வரவழைக்கிறாள். எழுத்துப் பிழைகளைத் தவிர்த்துப் பார்க்கும்போது அமிர்தம் படித்து ரசிப்போருக்கு அமிழ்துதான்.
—
யாளி, மணி தணிகை குமார், கற்பகா இண்டஸ்ட்ரீஸ், கன்னியாகுமரி – 629 501, பக்கம் 336, விலை 150 ரூ.
யாளி, இந்தச் சிற்பங்கள் இந்துக் கோயில் கோபுரங்கள், மதில் சுவர்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பதுதான் பலரது எண்ணம். சில கோயில்களில், யாளி வாகனத்தில் சுவாமி உலா வருவதும் உண்டு. ஆனால், நூலாசிரியரைப் பொறுத்தவரை, டைனோசர்களைப் போன்று பலகோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப் பூவுலகில் வாழ்ந்து மறைந்த விலங்கினம் என்று ஆணித்தரமாகக் கருதுகிறார். எப்படி ராட்சத டைனோசர் பற்றிய ஆய்வில் இன்னும் கண்டறியப்படாத பல உண்மைகள் மறைந்திருக்கின்றன என்று நம்புகிறோமோ, அதுபோலவே கோயில்களில் உள்ள யாளியைப் பற்றி நுட்பமாக ஆய்வு செய்தால் பல வினாக்களுக்கு விடை கிடைக்கும் என்றும் கூறுகிறார். திருநெல்வேலி மாவட்டத்துக்குச் சுற்றுலா சென்றபோது நூலாசிரியரின் கண்ணில்பட்ட யாளி சிலைதான் கதைக்குக் கருவாக அமைந்துள்ளது. கற்பனைக் கதையாகவே ‘யாளி’ நமக்கு அறிமுகமாகிறது. இத்தகைய கற்பனைக் கதைகளை எழுதும்போது இருக்க வேண்டிய சுவாரஸ்யம், விறுவிறுப்பு, தொய்வில்லாத நடை இவற்றுடன் வண்ணப்படங்களும் இணைக்கப்பட்டிருப்பது, யாளியை நாம் நன்றாக அனுபவிக்க உதவுகிறது. கற்பனை, அறிவியல், வரலாறு, சமூகம் எனப் பல பரிமாணங்களைச் சேர்த்து உருவாக்கப்பட்ட சுவாரஸ்யமான இந்நாவலின் முடிவில், ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்தைத் தந்திருப்பது வரவேற்கத்தக்கது. யாளியைப் படிக்கலாம், ரசிக்கலாம். சிறிது ஆய்விலும் ஈடுபடலாம். நன்றி: தினமணி 18-07-2011