வானத்தைப் பிளந்த கதை – ஈழப்போராட்ட நாட்குறிப்புகள்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், பா. ஜீவசுந்தரி, அரிவை வெளியீடு, 88/27, பாரதி முதல் குறுக்குத் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர், சென்னை – 58, விலை 120 ரூ.

பெண் விடுதலையின் முன்னோடி. திராவிட இயக்க முன்னோடிகளின் வரலாற்று நூல்கள் அரிதாகவே உள்ளன. இந்நிலையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நூல் கவனத்துக்குரியது. காங்கிரஸிலும் பிறகு சுயமரியாதை இயக்கத்திலும் பணியாற்றி தமிழகம் முழுவதும் பகுத்தறிவு, பெண் விடுதலைக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தார். பெரியாரின் கொள்கைகள் அக்காலப் பெண்களிடம் வெகுவாகப் பரவக் காரணமாக இருந்தவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். தேவதாசி குடும்பத்தில் பிறந்தவர் இவர். தேவதாசிகள் முறை ஒழியவும், அரசே சட்டமாக கொண்டுவரவும் காரணமாக இருந்தவர் இந்த அம்மையார். தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் என்றொரு நாவலையும் இவர் எழுதியுள்ளார். நவீன தமிழக வரலாற்றில் முதல் பெண் அரசியல் போராளியான மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை எளிமையாக எழுதியுள்ளார் பா. ஜீவசுந்தரி.  

 

சஹீர், பாவ்லோ கொய்லோ, மொ. பெயர்ப்பு – பி.எஸ்.வி. குமாரசாமி, வெளியீடு – காலச்சுவடு, 669, கே.பி,கே, சாலை, நாகர்கோவில்- 629001, விலை 250 ரூ.

சரளமான மொழிபெயர்ப்பு. ரசவாதி மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாசகர்களை எட்டியவர் பாவ்லோ கொய்லோ, நவீன காலத்தில் மக்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு இவரது எழுத்து, கீழைத்தேய ஆன்மிகப் பின்னணியில் சில இளைப்பாறுதல்களை அளிப்பதாலேயே இவரது எழுத்துக்கு இத்தனை பின்பற்றல் என்றும் கூறப்படுகிறது. ரசவாதியை அடுத்து தமிழில் வரும் பாவ்லோ கொய்லோவின் இரண்டாவது நாவல் சஹீர். நாவலாசிரியரை ஞாபகப்படுத்தும் பிரபலமான எழுத்தாளர் ஒருவரே நாயகன். போர்க்களச் செய்தியாளரான எழுத்தாளரின் மனைவி எஸ்தர் காணாமல் போகிறார். மனைவியைத் தேடுவதன் வழியாக நாயகனின் சுயபரிசீலனையும், திருமணம் மற்றும் உறவுகள் தொடர்பான விசாரணையும், பயணமும்தான் சஹீரின் கதை. திருமண உறவு என்பது இரு மனங்கள் இணைந்திருக்க விழையும், சேராத தண்டவாளங்கள் என்ற முடிவுக்கு அந்நாவலின் நாயகன் வந்து சேர்கிறான். சரளமான மொழிபெயர்ப்பு.  

 

வானத்தைப் பிளந்த கதை – ஈழப்போராட்ட நாட்குறிப்புகள், செழியன், வாழும் தமிழ் வெளியீடு, 44 முதல் தளம், 5 ஆவது தெரு, ஓம் சக்தி நகர், வளசரவாக்கம், சென்னை –  87, விலை 140 ரூ.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்ற இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான கவிஞர் மற்றும் நாடகாசிரியர் செழியனின் நாட்குறிப்புகள் வடிவிலான நாவலே வானத்தைப் பிளந்த கதை. தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவான ஆரம்பகாலப் பதிவுகள் உள்ளன. நவீனகால மனிதர்களுக்கு ஏற்படும் கொடுந்துயரங்களில் ஒன்றான புலம்பெயர்வின் வாதைகளைச் சொல்லும் நாவல் இது. எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்த ஓர் இனத்தின் கைகளில் ஆயுதங்கள் வலுக்கட்டாயமாக கையளிக்கப்படும் நிலைமை இந்நாவலில் எளிமையாகக் கூறப்பட்டுள்ளது. விடுதலைக்காக உருவான இயக்கங்களுக்கிடையிலான பகைமையையும் சகோதர யுத்தங்களையும் இந்நாவலில் கடக்கிறோம். சாதாரண மனிதர்களின் எளிய கனவுகள் சிதைக்கப்படும் ஒரு இனத்தின் அவல ஆவணம் இந்நாவல். அனைத்து அழிவுகளுக்கும் மத்தியில் உயிர்வாழப் போராடும் மனிதமனத்தின் வேட்கையை செழியன் தன் குறிப்புகளாக எழுதியுள்ளார். நன்றி: த சன்டே இந்தியன் 24-07-2011    

Leave a Reply

Your email address will not be published.