பாரதத்தில் ராஜதர்மம் அன்றும் இன்றும்

பாரதத்தில் ராஜதர்மம் அன்றும் இன்றும், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், சென்னை, பக்கம் 456, விலை 250 ரூ.

ஒரு ராஜ்யத்தின் ஏழு அங்கங்களில் உள்ள சுவாமி, அமாத்ய, மித்ர, கோச, ராஷ்ட்ர, துர்க, பல என்பனவற்றை (பக் 113) ஒவ்வொரு அங்கமாக விவரித்து, அன்றைய அரச தர்மம், இன்றைய நிலைக்கு எவ்விதம் பொருந்தி வருகிறது அல்லது முரண்படுகிறது என்பதை 64 கட்டுரைகளில் விவரித்துள்ளார் நூலாசிரியர். காட்சிக்கு எளியனாய் ராமன், சாலை சென்ற பிரஜைகளை அன்பொழுக விசாரிக்க அவர்கள், ‘நீ எங்களுக்கு அரசனாக இருக்கிறபோது என்ன குறைவு வரும்? நீயே ஆளணும். அதான் எங்க பிரார்த்தனை’ என்பார்களாம். (பக் 132) மஹாபாரதத்தில் கொடுங்கோலன் கனீநேத்திரன் ஆட்சி பீடத்திலிருந்து அகன்ற நிகழ்ச்சியை விவரித்து, ‘மக்களுக்கு அன்றும் சரி, இன்றும் சரி, அரசியல் முதிர்ச்சி இருந்ததை அறிய முடிகிறது.’ (பக் 318) ‘ஒரு சபையில் அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ, அவர்களை எதிர்த்துப் பேச பலரும் துணிவதில்லை என்ற கோழைத்தனம் அக்காலத்திலும் இருந்திருக்கிறது’ (பக் 323), ராமாயணம், மகாபாரதம், சுக்கிரநீதி இப்படிப் பல விவரங்களை தார்மீக அடிப்படையில் விவரித்துள்ள நூலாசிரியர் ஆங்காங்கு சுட்டிக்காட்டியுள்ளார். எல்லாருமே விரும்பிப் படிக்கக்கூடிய விறுவிறுப்பான அரசியல் ஒப்பீட்டு ஆய்வு நூல். – பின்னலூரான்  

 

பதஞ்ஜலி யோக சூத்திரங்கள், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு, சென்னை, பக்கம் 240, விலை 45 ரூ.

பதஞ்ஜலி யோக சூத்திரங்களுக்கு, சுவாமி விவேகானந்தர் எழுதிய விளக்கத்தின் தமிழாக்கத்தை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது. முன்னுரை, மூன்று பாதங்கள், சூத்திரங்கள், அவற்றின் அகர வரிசை எனத் தொகுத்துக் கொடுத்திருக்கின்றனர். எளிய தமிழில், சுலபமாகப் புரியும் வண்ணம் விளக்கங்கள் உள்ளன. முதல் பாதமாக இருக்கும் சமாதி பாதம், இருவகை சமாதிகளைச் சொல்கிறது. குரு என்ற ஒருவர் தேவை என்பதை சூத்திரம் 26 (பக் 42, 43) விளக்குகிறது. ஓம் என்ற சொல்லை உச்சரிப்பதும், அதன் பொருளைச் சிந்திப்பதாலும், நீங்கள் ஒளி பெறுவீர்கள். ஆன்மா வெளிப்பட்டுத் தோன்றும். பிராணாயாமத்தை சூத்திரம் 34ல் விளக்கமாக ஆசிரியர் கூறுகிறார். தியானத்தைப் பற்றி விரிவாக சூத்திரங்கள் 36-38 (பக் 62, 63) விளக்குகின்றன. இரண்டாவதாக உள்ள சாதனை பாதம், சமாதியைப் பெற, யோகப்பயிற்சி முக்கியம் என்று சொல்கிறது. புலனடக்கம், ஆன்மிகத்தைப் போதிக்கும் சாஸ்திரங்களைக் கற்றல், செயலின் பலனை இறைவனுக்கு அர்ப்பணித்தல் முதலியவற்றை சூத்திரம் 1 (பக் 77) விவரிக்கிறது. சூத்திரம் 5, அறியாமையை விளக்குகிறது. கைவல்ய பாதம், சித்திகளைப் பெற்ற, ஆசைகளை அகற்றி தியானத்தின் மூலம் சமாதி நிலையை அடைவதுதான், நிரந்தர இன்பம் தரும் என்று சொல்கிறது. தெளிவான அச்சும், பிழையின்மையும், நல்ல தாளும் கொண்டதும் இந்நூலின் சிறப்பு அம்சமாகும். – கே. ஆர். சிட்டிபாபு

 நன்றி: தினமலர் 16-09-12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *