குண்டலகேசி
அவஸ்தை – கன்னட நாவல், யு. ஆர். அனந்தமூர்த்தி, காலச்சுவடு பதிப்பகம், பக்கம் 207, விலை 150ரூ.
கன்னட இலக்கிய உலகில் மரியாதைக்குரிய ஒரு இலக்கியவாதி, யு. ஆர். அனந்த மூர்த்தி. ஞானபீடம் உள்ளிட்ட, பல பெரிய இலக்கிய அமைப்புகளிடமிருந்து விருதுகளும் பரிசுகளும் பெற்றவர். இவருடைய சமஸ்கர, பாரதிபுர என்ற இரண்டு புதினங்களும், இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் மாற்றம் பெற்றுள்ளன. இவருடைய ‘அவஸ்தை’ என்ற நாவலை நஞ்சுண்டன் மொழி பெயர்ப்பில் காலச்சுவடு கிளாசிக் நாவல் வரிசை வெளியீடாக வந்துள்ளது. இதற்கு முன்னரே, வேறு ஒரு தமிழ் எழுத்தாளரின் மொழிபெயர்ப்பில், வேறு ஒரு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. கிருஷ்ணப்பா என்ற கிராமப்புற விவசாயியின், 50 ஆண்டு வாழ்க்கை அனுபவத்தைச் சொல்லும் நாவல். மாடு மேய்க்கும் அந்த கிராமத்துச் சிறுவன், அருகில் உள்ள நகரில், பள்ளி, கல்லூரியில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுகிறான். இங்கு சமூக அரசியல் சார்ந்து கவனம் திரும்புகிறது. வாலிப வயதில் வழக்கம் போல, இவன் மீது ஒரு பெண்ணுக்கு ஆசை வர, இவனது காமப் பசிக்கு ஒருத்தி விருந்து படைக்கிறாள். மற்றொருத்தியும் முன் வரும்போது இந்த ‘வைராக்கிய பேர்வழி’ மறுத்துவிடுகிறான். அரசியல் அனுபவங்கள் வழக்கம்போல அடிதடி, அடிவெட்டு, பதவிபறிப்பு என்று பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் நேர்மையான இடதுசாரி அரசியல்வாதியாக பரிணமிக்க எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. இந்த நாவலில் மஹேஸ்வரய்யா வீரண்ணா அண்ணாஜி, ஜோயீஸ், நாகேஷ், பைராகி, அனுமந்தய்யா என, பல ஆண் கதாபாத்திரங்கள்; லூசினா, ஜோதி, சீதா, தேஷ்பாண்டே என, பல வித்தியாசமான குண இயல்புகளுடன் கூடிய கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன. மூன்று பாகங்களைக் கொண்ட இந்த நாவலின் இரண்டாம் பாகத்தில் போலீஸ் அராஜகம், சித்ரவதை பற்றிய பகுதிகள், கொடுமைகள், கொடூரங்கள், அராஜகங்கள் என, போலீசைப் போட்டு கிழி கிழி என கிழித்திருக்கிறார் நாவலாசிரியர். நெஞ்சை உறைய வைக்கும் பகுதி இது. திரைப்படமாக்கப்பட்டு படுதோல்வி அடைந்த இந்த நாவல், இலக்கிய வாசகனின் வாசிப்பு அனுபவத்தில் சிலிர்ப்பையும் அதிர்வையும் ஏற்படுத்தும். – ஜனகன்
—
தமிழர் வரலாறு, ஞா. தேவநேயப் பாவாணர், பூம்புகார் பதிப்பகம், பக்கம் 416, விலை 250 ரூ.
இந்திய வரலாற்றை வடக்கிலிருந்து துவங்கி, தென்னிந்திய வரலாற்றைச் சுருக்கி வெளியிட்டனர் என்ற ஆதங்கம் இந்நூலாசிரியருக்கு இருந்ததாகவும், சிறு வரலாற்று உண்மைகளான, குமரிக்கண்டம் இருந்ததையும், முச்சங்கங்கள் இருந்ததையும், தமிழ் வரலாற்றினை எழுதியோர் மறைத்தும், திரித்தும் எழுதியதாகவும் இந்நூல் வாயிலாக அறிகிறோம். நூலாசிரியரின் தூய தமிழ்ப்பற்றும், ஆழ்ந்த அகன்ற ஆய்வும், நூல் முழுவதும் தெரிகின்றன. கம்ப்யூட்டர் காலமாக உள்ள இக்காலத்தில் நூலாசிரியரின் கருத்துகளை, வேகம் மிக்க இன்றைய இளைஞர்கள் எந்த அளவுக்கு ஏற்பர் என்பது ஐயமாக உள்ளது.
—
குண்டலகேசி, இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், சென்னை, பக்கம் 192, விலை 100 ரூ.
இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்த எழுத்தாளர், இந்திரா பார்த்தசாரதியின், மூன்று குறுநாவல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ‘நான் இங்கிலீஷ் பாடம் மட்டும் சொல்லித்தரலே, சீரழிஞ்சு போயிருக்கிற சமுதாயத்தைச் சீர்திருத்தம் செய்வதற்கான வழிகளையும், அவர்களுக்குச் சொல்லித் தர்றேன்’ (பக் 15). ‘பூமித்தாய் சாப்பிடச் சோறுபோடுது, அப்பேர்ப்பட்ட பூமியை, தரிசாக்கிக் கட்டடம் கட்டறாங்களே, அதுவும் சினிமா கொட்டகை, இது நம்ம தாயை அவமதிக்கிற மாதிரி’ (பக் 50). இப்படி ‘குண்டலகேசி’யிலும் ‘ஒவ்வொருத்தனும், தான் தான் தர்மத்துக்கு நாட்டாண்மைக்காரனா நினைச்சுக்கிறதுதான் உலகத்திலே முக்கால்வாசிச் சண்டைக்குக் காரணம்’ (பக் 127) என ‘ஊனம்’ நாவலிலும், ‘அவன் உயரத்தைப் பற்றிச் சொல்லவில்லை. உலகத்தின் துயரத்தை எல்லாம் தான் தாங்கிக்கொண்டிருப்பதுபோல் அவன் முகம் இருக்கும். அவன் மேதையா, பைத்தியமா யார் கண்டனர்’ (பக் 167) என ‘கானல் நீர்’ குறுநாவலிலும் கதைமாந்தர்கள் மூலம், சமூகப் பிரச்னைகளை ஆங்காங்கே தொட்டுக் காட்டியுள்ளார் நூலாசிரியர். – பின்னலூரான். நன்றி: தினமலர் 30-09-12