கங்கை கரையினிலே
கங்கை கரையினிலே, ப. முத்துக்குமாரசாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை – 600 014, பக்கம் 205, விலை 150 ரூ.
எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ள ப. முத்துக்குமாரசாமி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வம்சாவளி, தமிழை முறையாகப் படித்த ஆன்மிகவாதி. ஆன்மிகத்தை நல்ல தமிழில் வழங்கும் ஆற்றல் கைவரப்பெற்றவர். நூலாசிரியர் சென்ற ஆண்டு சதுர்தாம் தரிசனம் என்று அழைக்கப்படுகின்ற யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதாரிநாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய தலங்களுக்கு புனிதயாத்திரை செய்துவிட்டு, நம்மையெல்லாம் இந்த நூலின் வாயிலாக அத்துணை புண்ணிய தலங்களுக்கும் அழைத்தும் செல்லுகிறார். நூலில் திருத்தலச் சிறப்பு, தங்குமிடம், வழிப்பாதை, அந்த இடங்களைச் சுற்றி அமைந்துள்ள முக்கிய ஆன்மிக மையங்கள் என அனைத்து விவரங்களையும் மிகச்சிறப்பாகப் பதிவு செய்கிறார். குறிப்பாக, யாத்திரைக் குறிப்புகள் என்ற கடைசிக் கட்டுரை, யாத்திரை மேற்கொள்ள இருப்பவர்களுக்குத் தேவைப்படும் மொத்த விவரங்களையும் சொல்கிறது. ஆன்மிக அன்பர்களின் வரவேற்பைப் பெறும் நூல்.
—
அமெரிக்க ஜனாதிபதிகள், வானதீபன், மகா பதிப்பகம், பக்கம் 160, விலை 600ரூ.
குறிப்பாக, மாணவர்களுக்குப் பயன்படும் வகையில், அமெரிக்காவில், 1789ஆம் ஆண்டு பதவி ஏற்ற ஜார்ஜ் வாஷிங்டன் முதல், 2009ஆம் ஆண்டு பதவி ஏற்ற பராக் ஹுசைன் ஒபாமா வரை, அமெரிக்க ஜனாதிபதிகளின் வாழ்க்கை வரலாறுகள் சுருக்கமாகத் தரப்பட்டிருக்கின்றன. – சிவா
—
திருமுருகன் திருவருட் பெட்டகம், ஸ்ரீ வேம்புசித்தர், அக் ஷரா பப்ளிகேஷன்ஸ், பக்கம் 200, விலை 90 ரூ.
நூலாசிரியர் தஞ்சையில் பிறந்த குணசேகரன், குருவருள் பெற்று ஸ்ரீவேம்பு சித்தர் என்ற பெயர் தாங்கி வாழ்பவர், குன்றுதோறும் திகழ்ந்து அருள்புரியும் முருகப்பெருமானின் தோற்றம், இயல்புகள் முதலியவற்றைத் தெளிவாக விளக்குகின்றார் நூலாசிரியர். முருகா என்ற பெயரில் உள்ள எழுத்துக்கள் திருமால், சிவன், நான்முகன் ஆகியோரைக் குறிப்பிடுவதாகக் கூறுகின்றார். முருகப்பெருமானின் வேறுபெயர்கள் அவற்றுக்குரிய விளக்கங்கள் தரப்பெற்றுள்ளன. சென்னிமலை, வயலூர், குன்றத்தூர், கழுகுமலை, மயிலம், வடபழனி, வல்லக்கோட்டை, திருவிடைக்கழி முதலிய ஊர்களில் குடிகொண்டு அருள்புரியும் முருகன் பற்றியும், அவ்வூர்களுக்குச் செல்வதற்கு உதவும்வகையில், அமைவிடம் பற்றியும் குறிப்பிட்டுள்ளமை சிறப்புப் பெறுகின்றது. முருக பக்தர்களும், மற்றவர்களும் இந்நூலினைப் படித்து விரிவான விளக்கங்களை அறிந்து, பயன்பெறலாம். கருத்துகள் நிறைந்த பக்தி நூல்.