களவுபோன என் கடவுளும் காணாமல்போன என் காதலியும்

களவுபோன என் கடவுளும் காணாமல்போன என் காதலியும், பேராசிரியர் ப. சந்திரசேகரன், ஆனந்து பப்ளிகேஷன்ஸ், 1, தாமஸ்நகர், சின்னமலை, சைதாப்பேட்டை, சென்னை – 15, விலை 500 ரூ.

சிக்கலானதும் கண்டுபிடிக்க முடியாததுமான குற்ற வழக்குகள் வந்தால் அனைவரும் தேடும் நபர் பேராசிரியர் ப. சந்திரசேகரன். ‘தடய அறிவியல்’ சந்திரசேகரன் என்றால், அனைவருக்கும் தெரியும். ராஜீவ் காந்தி கொலை வழக்கு முதல் ஆட்டோ சங்கரின் கொலை வழக்கு வரை அவரால் மர்மம் அவிழ்க்கப்பட்ட முடிச்சுகள் ஏராளம். தமிழகத்தின் மிகமுக்கியமான தீ விபத்துக்கள் அனைத்துக்கும் முதல் புகையைக் கண்டுபிடித்தவரும் அவர்தான். 20 ஆயிரம் வழக்குகளுக்கான மைய இழையைக் கண்டுபிடித்த அவர்தான், ‘தடய அறிவியல்’ என்ற வார்த்தையையும் தமிழுக்கு வழங்கியவர். அதுவரை ‘ஃபாரன்ஸிக் சயின்ஸ்’ என்றால் குற்றம் சார்ந்த அறிவியல் என்று சொல்லிவந்தனர். இவர்தான் ‘தடயம்’ என்ற சொல் தமிழில் இலக்கியத்தில் இருப்பதைச் சொல்லி  அந்த வார்த்தையை அரசை ஏற்றுக்கொள்ள வைத்தவர். பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் முக்கிய நிகழ்வுகளில் தன்னுடைய கருத்தைத் தயங்காமல் முன்வைப்பவர். அவர் எழுதிய புத்தகம் இது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பத்தூர் விஸ்வநாத சுவாமி கோயில் அருகில் இருந்த நிலத்தை ராமமுர்த்தி என்பவர் தோண்டும் நேரத்தில் நடராஜர் உள்ளிட்ட ஏராளமான சிலைகள் கிடைத்தன. அவற்றை வேறு ஓர் இடத்தில் மூடிவைத்தார். பின்னர் நடராஜர் சிலையை மட்டும் எடுத்து சந்திரன் என்பவருக்கு 200 ரூபாய்க்கு விற்றார். அதே சிலையை மக்பூல் ஹுசைன் என்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றார் சந்திரன். இதில் நிறைய பணம் கிடைக்கிறது என்று தெரிந்துகொண்ட ராமமுர்த்தி ஆறுசிலைகளை சந்திரனுக்குத் தெரியாமல் மக்பூல் ஹுசைனுக்கு விற்றார். மீதம் இருந்த சிலைகளை தன்னிடமே வைத்துக்கொண்டார். இந்த விஷயங்கள் சிலை கடத்தல் தடுப்புப் போலீஸுக்குத் தெரியவந்து, அனைத்து சிலைகளையும் கைப்பற்றினர். ஆனால் நடராஜர் சிலை மட்டும் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. ஸ்காட்லாண்டு யார்டு போலீஸார், நடராஜர் சிலை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சி ஆய்வகத்தில் இருப்பதைக் கண்டுபிடித்துச் சொன்னார்கள். அந்த நடராஜர்தான், தஞ்சை மாவட்டம் பத்தூரில் இருந்தவர் என்று லண்டன் மாநகரம் ராயல் ஹைகோர்ட் நீதிபதி அயான் கென்னடியின் முன் நிரூபித்து அதை மீண்டும் கொண்டுவர முயற்சித்த கதையைத்தான் புத்தகமாக சந்திரசேகரன் எழுதி இருக்கிறார். இவர் சிதம்பரத்துக்காரர், சிறுவயதில் தன் தாத்தாவும், தன்னுடைய சிநேகிதியும் உடன் இருக்க நடராஜர் கோயிலை வலம் வந்த அனுபவம் இந்த வழக்கின் விசாரணைக்கு எப்படி உதவியது என்ற தன் வரலாற்றையும் இணைத்துள்ளார். பள்ளிப் பருவச் சிநேகிதியை, பிற்காலத்தில் இந்த சிலை கண்டுபிடிக்கத் தேவையான அடையாளங்களைப் பதிப்பிக்கவேண்டும் என்று சந்திரசேகரன் சொல்லும் ஆலோசனை நிச்சயம் பின்பற்றவேண்டிய ஒன்று. – புத்தன் நன்றி: ஜூனியர் விகடன் 16/9/12    

Leave a Reply

Your email address will not be published.