நீதிமன்றங்களில் தமிழ்

நீதிமன்றங்களில் தமிழ், டாக்டர் வி.ஆர்.எஸ்.சம்பத், சட்டக்கதிர், 3/2 சுவாதி ராம் டவர்ஸ், 3, துர்காபாய் தேஷ்முக் சாலை, ராஜா அண்ணாமலைபுரம் , சென்னை – 28. புத்தக விலை ரூ. 400  

கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த ஒரு கொலை வழக்கு பற்றி சட்ட அறிஞர் மா.சண்முக சுப்பிரமணியன் ஒரு கருத்தை தனது புத்தகத்தில் எழுதினார். அந்த வழக்கில் குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தனக்கு என்ன தண்டனை விதிக்கப்பட்டது என்பதைத் தன் வழக்கறிஞர் மூலமாக அறிந்த அந்தக் குற்றவாளி, ‘ஐட்ஜ் துரைங்களே! ரெண்டு நாளா வக்கீலுங்க என்ன பேசினாங்கன்னு தெரியல. நீங்க என்ன தீர்ப்பு படிச்சீங்கன்னும் புரியல. ஆனா, எனக்கு தூக்குத் தண்டனை விதிச்சிருக்கீங்கன்றது மட்டும்தான் எனக்குப் புரியுது’ என்று இரண்டு கைகளையும் கூப்பிக் கதறினார். இதைச் சுட்டிக்காட்டிய மா.சண்முக சுப்பிரமணியம், ‘நீதியின் குரல் அவருக்குப் புரியாமல் போய்விட்டது. ஆனால், நீதி விதித்த தண்டனை அவரது உயிரைப் பறித்துவிட்டது’ என்று எழுதினார். இந்த அவலம் இன்னமும் மாறவில்லை. தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் இன்னமும் ஆங்கிலமே அரியணையில் இருக்கும் சூழ்நிலையைச் சுட்டிக்காட்ட வந்திருக்கிறது இந்தப் புத்தகம்! தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையாக மட்டும் இது முடங்கிவிடாமல் நீதித்துறை ஆட்சி செய்யும் மாட்சிமை தங்கிய நீதிபதிகளும் மூத்த சட்ட வல்லுனர்களும் முக்கியமான வழக்கறிஞர்களும் சேர்ந்து கொடுக்கும் முழக்கத்தின் தொகுப்பாக இது இருக்கிறது. நீதிமன்றங்களில் வழக்காடுதல், தீர்ப்பு ஆகியவை தமிழில் இருக்கவேண்டும் என்பது பல ஆண்டு காலக் கோரிக்கையாக இருந்தாலும் 2006-ம் ஆண்டு அதற்கு ஒரு சட்டரீதியான முக்கியத்துவத்தை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி ஏற்படுத்தினார். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள், இதர நடவடிக்கைகள் தமிழ் மொழியில் அமைவதற்கான தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கருணாநிதியால் நிறைவேற்றப்பட்டது. உயர் நீதிமன்றம் நீங்கலாக கீழ் நீதி மன்றங்களில் அதிக அளவில் தமிழில்தான் விவாதங்கள் நடக்கின்றன. சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பே மூத்த வழக்கறிஞர் வானமாமலை தமிழில் வாதாடியதை நீதிபதி ஏ.கே.ராஜன் சுட்டிக்காட்டி உள்ளார். ‘தமிழில்தான் தீர்ப்பு எழுதவேண்டும்’ என்று 1988-ம் ஆண்டு நீதிபதி மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தபோது சுற்றறிக்கை அனுப்பினார். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக வருபவர்களில் 40 சதவிகிதம் பேர் அயல் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், தமிழில் விவாதம், தீர்ப்பு வழங்குதலில் சிக்கல் இருக்கிறது. சட்டங்கள் அனைத்துமே ஆங்கிலத்தில் உள்ளன. அதை மொழிபெயர்ப்பதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. எனவே, நீதிமன்றங்களில் தமிழைக் கொண்டுவருவதற்கான சாதக, பாதக அம்சங்கள் அனைத்தையும் இந்தப் புத்தகம் அலசி ஆராய்கிறது. ‘எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம், குறைகளைக் களைந்தோமில்லை’ என்றார் பாரதிதாசன். தமிழ் ஆட்சிமொழி அந்தஸ்து பெற்று 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. தீர்ப்புகளைத் தமிழில் எழுதலாம் என்று உத்தரவு போட்டு கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. தமிழில் வழக்கறிஞர்கள் வாதாடலாம் என்று 1982-ல் அறிவிப்பு வந்தது. ஆனாலும், தமிழைச் சட்டமொழி ஆக்கத் தேவையான காரியங்களைச் செய்யவில்லை. இந்த அலட்சியங்களை எல்லாம் சுட்டிக்காட்ட வந்துள்ளது இந்தப் புத்தகம்! – புத்தகன் நன்றி: ஜூனியர் விகடன் 10-10-12    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *