மனநலக் கதைகளும் மாத்ருபூதம் பதில்களும்,
மனநலக் கதைகளும் மாத்ருபூதம் பதில்களும், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-836-5.html
வாழ்க்கை என்றால் எத்தனையோ பிரச்சினைகள். அதிலும் இல்லற வாழ்க்கை என்றால், பிரச்சினைகளுக்கு அளவே இல்லை. பேசித் தீர்க்கப்பட வேண்டிய கணவன் மனைவி தகராறுகள்கூட, விவகாரத்துவரை போகின்றன. பலருடைய வாழ்க்கை சிக்கல்களை மறைந்த மனநல மருத்துவர் மாத்ருபூதம், திறமையாக தீர்த்து வைத்திருக்கிறார். இப்படி பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டதன் மூலமாகவே, அவர் டெலிவிஷன் தொடரிலும் புகழ்பெற்றார். இந்தப் புத்தகத்தில் 42 பிரச்சினைகளும், அவற்றுக்கு மாத்ருபூதம் அளித்த தீர்வுகளும் இடம் பெற்றுள்ளன. பிரச்சினைகளையும் தீர்வையும் சுவைபட அருமையான சிறுகதைகள் போல எழுதியுள்ளார் எஸ். கதிரேசன். நன்றி: தினத்தந்தி, 24/4/2013.
—-
புதுநோக்கில் பழம் பாக்கள், அருண்அகில் பதிப்பகம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை 29, விலை 100ரூ.
சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்யப்பட்ட 12 கட்டுரைகளின் தொகுப்பு நூல். காலத்தால் என்றும் அழியாத பேறு பெற்ற இச்சங்க இலக்கிய பாக்களைக் கற்கும்போது திணை, துறை தொடர்பான பிழைகொண்ட பொருளுரைகள், களையப் பெறாத ஐயங்கள், சில தவறான ஆய்வு முடிவுகள் என அமைந்துள்ள சில தடைக்கற்கள் நீக்கப்பெறாமல் மரபு என்ற பெயரில் அப்படியே பதிவாகி வருகின்றன. இவ்வாறு பிழைகளைக் கலைதலும், ஐயங்களைத் தெளிவுறுத்தலும், சில மாற்றங்கள், திருத்தங்கள், அடிப்படைச் சிக்கல்கள் ஆகியவற்றை நீக்குவதை நோக்கமாகக் கொண்டு ஆய்வு நோக்கில் கட்டுரைகள் அமையப் பெற்றுள்ளன. உரையாசிரியர்களுக்கும், அகராதிகளுக்கும் இதுகாறும் கூறி வந்த பொருளைச் சங்க இலக்கியச் சான்றுகளின் வாயிலாக மறுத்துப் புதியதோர் பொருளைக் காட்டி, தரமிக்க ஆய்வு நூலாக ஆக்கியுள்ளார் நூலாசிரியர் வாணி அறிவாளன். இந்நூல் தமிழ்ப்புலமை உலகின் பாராட்டைப் பெறும் என்பது உறுதி. நன்றி: தினத்தந்தி, 24/4/2013.