மனோன்மணியம் சுந்தரனார் கலையும் கருத்தியலும்
மனோன்மணியம் சுந்தரனார் கலையும் கருத்தியலும், தொகுப்பும் பதிப்பும்- த. கருப்பையா, செம்மூதாய் பதிப்பகம், சென்னை, பக். 375, விலை 300ரூ.
தமிழ் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளைக்கென்று ஒரு தனித்த இடம் உண்டு. கடந்த மாதம் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரி தமிழ்த்துறை நடத்திய மனோன்மணியம் சுந்தரனார் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பேராசிரியர் சுந்தரனாரால் இயற்றப்பட்ட மனோன்மணியம் நாடகம், தமிழ் இலக்கிய வரலாற்றில் மட்டுமின்றி, தமிழ்ச் சமூக வரலாற்றிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மனோன்மணியத் தமிழ்த்தாய் வணக்கமும் திராவிட மொழிகள் பிரிந்த வரலாறும் என்கிற முதல் கட்டுரையில், தமிழ்நாடு அரசு தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகளை நீக்கிக் தமக்கு வேண்டியவாறு தமிழ்த் தெய்வ வணக்கப் பாடலாக அமைத்துக்கொண்டது. பேராசிரயர் சுந்தரம் பிள்ளை அவர்கள் மொழி வரலாற்று உண்மையினைத் தாம் பாடிய பாடல்களில் அமைத்துள்ளார். ஆனால் தமிழ் நாடு அரசு இரண்டு பாடல்களில் முதல் பாடலை அப்படியே வைத்துக்கொண்டு, அதனுடன் இரண்டாவது பாடலிலுள்ள கடைசி வரிகளை மட்டும் இணைத்துக் கொண்டது. அதனால் வரலாற்றுண்மை தமிழ் மக்களிடையே மறைக்கப்படுகிறது என்னும் உண்மையையும், திராவிட மொழிகள் குறித்த விரிவான விளக்கத்தையும் முன்வைக்கிறது, 1975இல் வ.சுப்பையா என்பவர் செந்தமிழ்ச் செல்வியில் எழுதிய பதிவு. இக்கட்டுரை தொடங்கி, மனோன்மணியம் நாடகத்தில் உவமைகள், சுந்தரனாரின் இசைப்புலமையும் கலைநுட்பமும், சுதந்திரப் போரில் சுந்தரம்பிள்ளை, மனோன்மணியத்தில் ஆடற்கலை, தமிழ்ப்பணி, சுந்தரனாரின் இடைக்காலத் திருவிதாங்கூர் கல்வெட்டு ஆய்வுகள், சுந்தரனார் தமிழ்ப் புலமையில் வள்ளுவர் கருத்துகள், ஒன்பான் சுவை, புலப்பாட்டு நெறி, மெய்ப்பொருளும் அறிவியலும் என இத்தொகுப்பிலுள்ள 65 ஆய்வுக் கட்டுரைகளும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் பன்முக ஆளுமைகளைப் பறைசாற்றுகின்றன. நன்றி: தினமணி, 20/10/2014.