மன்னுபுகழ் மணவாள மாமுனிவன்

மன்னுபுகழ் மணவாள மாமுனிவன், இரா. அரங்கராஜன், ஸ்ரீ ரங்க நாச்சியார் அச்சகம், திருச்சி, பக்.410, விலை 200ரூ.

மணவாள மாமுனிகளின் வாக்கையும் வாழ்க்கையையும் படம் பிடித்துக்காட்டி, படிப்பவர்களை மாமுனிகள் வாழ்ந்த காலத்துக்கே கொண்டுபோய், நேராக அனுபவிக்கும் அனுபவத்தை இந்நூல் அளிக்கிறது என்று அ.வெ. ரங்காசார்யர் எழுதியுள்ள அணிந்துரை நூற்றுக்கு நூறு சரி.  ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமத் நாதமுனிகளால் தொடங்கப்பெற்று, ஸ்ரீமந் மணவாள மாமுனிகளுடன் நிறைவு பெறுகிறது. அந்தப் பரமனை எப்படிச் சேவிக்க வேண்டும், எப்படி கைங்கர்யங்கள் செய்ய வேண்டும் என்று உதாரண புருஷர்களாய்த் திகழ்ந்த எண்ணற்ற ஸ்ரீ வைஷ்ணவர்களை நூலாசிரியர் தகுந்த அளவுக்கு அறிமுகப்படுத்தி, இடையிடையே அவர்களைப் பற்றிய பூர்வோத்திரங்களையும் சிறப்புகளையும் அளவோடு சொல்லி அலுப்புத் தட்டாமல் வரலாற்று உண்மைகளை விவரிக்கிறார். உலுக்கான் படையெடுப்பின் போது ஸ்ரீ ரங்கத்திலிருந்து அழகிய மணவாளரும் உபய நாச்சிமார்களோடு தென் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், செஞ்சி என்று சென்று மீண்டும் திருவரங்கம் திரும்பும் காட்சிகளில் கண்களில் பிரவாகமாக நீரைச் சொறியும் உணர்ச்சிகரமான விவரணம். மத்தப் படித்த அறிஞர்கள் அல்லாது பாமரர்களும் அந்தப் பரமனையும் அவர் தந்த ஆசார்யர்களையும், அடியார்களையும் அறிந்து கொள்ளும்விதத்தில் எளிய தமிழில் நூலை யாத்த ஆசிரியர், பல்லாண்டு தமிழுக்கும் வைணவத்துக்கும் சேவை செய்ய வேண்டும். தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் அப்பழுக்கற்ற இந்த ஆன்மிக வரலாற்று நூலை ஒரு முறை படித்து உய்ய வேண்டும். நன்றி: தினமணி, 26/9/2011  

Leave a Reply

Your email address will not be published.