பாம்பின் கண்-தமிழ் சினிமா ஓர் அறிமுகம்
பாம்பின் கண்-தமிழ் சினிமா ஓர் அறிமுகம், சு. தியோடர் பாஸ்கரன், தமிழில்-லதானந்த், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 280, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-701-5.html
திரைப்படம் குறித்து எழுதப்பட்ட சிறந்த நூலுக்கான இந்திய அரசின் விருது பெற்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்நூல். 1897ஆம் ஆண்டு சென்னையில் (அப்போது மதராஸ்) அரைவல் ஆஃப் தி டிரெயின், லீவிங் தி ஃபேக்டரி ஆகிய இரு குறும்படங்கள் திரையிடப்பட்டதில் தொடங்கி சாமிக்கண்ணு வின்சென்ட், ஆர்.வெங்கையா, ஆர்.நடராஜ முதலியார், பிரகாசா, ஏ. நாராயணன் போன்றோருடைய சினிமா ஈடுபாடுகளும் தமிழ் சினிமாவின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவில் வசனங்களின் முக்கியத்துவம், பாடல்களின் பங்களிப்பு போன்றவை தனித்தனி அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளன. சில வசனகர்த்தாக்கள், பாடலாசிரியர்கள், இயக்குநர்கள் பற்றியும் அரிய தகவல்கள் உள்ளன. சில முக்கியமான படங்களின் கதைச் சுருக்கமும் அப்படங்களில் பணிபுரிந்த கலைஞர்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 1987இல் சென்னை விக்டோரியா அரங்கில் எம்.எட்வர்ட்ஸ் சில குறும்படங்களைக் காட்டியது முதல் 2011இல் ஆடுகளம் படத்துக்காக வெற்றி மாறன் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்றதுவரை தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. படங்களின் தலைப்புகளும் சொல்லடைவும் இணைக்கப்பட்டிருப்பது படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நன்றி: தினமணி, 24/6/13.
—-
பறவைகள், புகைப்படம்- வி.விஷ்வக் சேனன், எழுத்து- சகா.செந்தில்குமார், சென்னை பிலிம் ஸ்கூல், 4/16, முதல்குறுக்குத் தெரு, 9வது பிரதான சாலை, சாமிநாதன் நகர், கொட்டிவாக்கம், சென்னை 41, விலை 400ரூ.
பக்கத்துக்கு பக்கம் மிக துல்லியமான வண்ணப்படங்களில், விதம் விதமான பறவையினங்கள் உயிர்ப்போடு உலா வருகின்றன. நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் மற்றும் பல்வேறு இடங்களில் வசிக்கும் பறவைகள் இயற்கையான சூழலில் காட்சி அளிப்பதை தத்ரூபமாக கேமராவில் சிறைப்பிடித்து வெளியிட்டு இருக்கும் மகத்தான கலைஞர், பத்தே வயதான விஷ்வக் சேனன் என்ற மாணவர் என்பதை அறியும்போது, வியப்பு உச்சம் அடைந்துவிடுகிறது. பறவைகள் மீது பாசம் கொண்டவர்களிடமும், ஆய்வு செய்யும் ஆர்வலர்களிடமும் கண்டிப்பாக இருக்க வேண்டிய அருமையான புத்தகம். நன்றி: தினத்தந்தி, 5/6/13.
