முல்லை பெரியாறு
முல்லை பெரியாறு, ஜி. விஜயபத்மா, விகடன் பிரசுரம், பக். 175, விலை 115ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-233-6.html அணை பிறந்த கதை பென்னிகுயிக்-தமிழ்க் கடவுள். ஆக்கிரமிப்பாளராக இந்த நாட்டுக்குள் வந்து ஆபத்பாந்தவனாக மாறும் மனப்பக்குவம் ஒருசில மனிதர்களுக்கே வாய்க்கும். அப்படிப்பட்ட ஆளுமைகளில் ஒருவர் பென்னிகுயிக். பசி, பஞ்சம் தாண்டவம் ஆடிய காலத்தில், உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்காகத் தொடங்கப்பட்ட முல்லை பெரியாறு அணையின் கட்டுமானத்தை, பல்வேறு அதிகாரிகள் முடியாது என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டு விலகியபோது, எடுத்துச் செய்து கட்டி முடித்தது மட்டுமல்ல பென்னிகுயிக் சாதனை, அதற்கான பண உதவியைச் செய்வதற்கு அன்றைய இந்திய அரசின் பிரிட்டிஷ் அதிகாரிகள் மறுத்தபோது, லண்டன் சென்று தன்னுடைய சொந்தப் பணமான 45 லட்சம் ரூபாயை, 200 ஆண்டுகளுக்கு முன்னால் எடுத்துவந்து கட்டிமுடித்தவரை, கடவுள் என்று சொல்லாமல் என்னவென்று சொல்லமுடியும்? அதனால்தான் தென் பகுதி மாவட்டத்து மக்கள் முருகன், விநாயகன் மாதிரி பென்னிகுயிக் என்ற பெயரையும் தங்களது வாரிசுகளுக்கு வைத்து வருகிறார்கள், நன்றி மறக்காமல். ஆனாலும் அதிலும் அரசியல் புகுந்து அணையை அசைத்துப் பார்க்கிறது. கேரள அரசியல்வாதிகள் சாதி, மத, கட்சி வித்தியாசங்களை மறந்து, இந்த அழிக்க முடியாத அணையைச் சிதைக்க முயற்சித்து வருகிறார்கள். இயற்கையும் நீதியும் தமிழகத்துக்கு கை கொடுத்துவரும் சூழலில் முல்லை பெரியாறு அணை பிறந்த வரலாற்றை, கதை மாதிரியான நடையில் தொகுத்துச் சொல்லியிருக்கிறார் பத்திரிகையாளர் ஜி.விஜயபத்மா. சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தைக் கட்டிய பென்னி குயிக், அளவுக்கதிகமான கிரிக்கெட் பிரியர். அவரது கட்டுமானப் பணித்திறமையைப் பார்த்துத்தான் பொதுப்பணித் துறை கட்டுமானப் பணிப்பொறுப்பை அரசு வழங்குகிறது. சிறந்த கட்டடத்தை திறமையான பொறியாளன் கட்டிவிடுவான். ஆனால் முல்லை பெரியாறு, அணையை மனிதாபிமானிதான் கட்டியிருக்க முடியும் என்பதை இந்தப் புத்தகம் படிக்கும்போது உணரலாம். மதுரை என்ற ஊரை அடையாளப்படுத்தும்போதே, நினைவுக்கெட்டாத காலத்தில் இருந்து பாசனத்துக்கு நீர் இல்லாமல் விவசாய நிலங்கள் காணப்படும் மாவட்டம் என்று சொல்லும் பென்னிகுயிக், அணையின் கட்டுமானப் பணி நடந்த இடம் எவ்வளவு மோசமாக இருந்தது என்பதையும் வர்ணிக்கிறார். இத்தகைய தியாகத்தால் எழுப்பட்ட முல்லை பெரியாறு அணையை எப்படியாவது காப்பாற்றி ஆக வேண்டும் என்ற கர்வத்தைக் கொடுக்கிறது இந்தப் புத்தகம். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 9/7/2014.