முல்லை மண் – மக்கள் – இலக்கியம்
முல்லை மண் – மக்கள் – இலக்கியம், வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ.
தமிழகத்தின் ஐவகை திணைகளில், முல்லைத் திணை பற்றிய ஆய்வாக, இந்த நூல் திகழ்கிறது. முல்லை பற்றிய 233 பாடல்கள் பாடிய, 82 புலவர்கள் பட்டியல் இடப்பட்டுள்ளனர். கிரேக்க, லத்தீன் உலக இலக்கியங்களுடன், முல்லைப் பாக்கள் ஒப்பிடப்பட்டுள்ளன. முல்லை மலர்களால் இத்திணைப் பெயர்கள் அமைந்ததும், முல்லைப்பண், முல்லை யாழ் பற்றிய விளக்கமும் தரப்பட்டுளள்ன. கற்பை முல்லையோடு மட்டும் சேர்த்து ‘முல்லை சான்ற கற்பு’ என்பதன் விளக்கம் தரப்பட்டுள்ளது. ‘முல்லை விருந்து’ புலவர்களால் வியந்து போற்றப்பட்டுள்ளது. முல்லைத் திணையின் சிறுபொழுதும், பெரும்பொழுதும் ஆய்வு செய்யப்படுகின்றன. வேதக் கல்வியை, ‘எழுதாக் கற்பின் நின்சொல்’ என்றும், ‘வாணுதல் அரிவை முல்லை’ என, மகளிர் முல்லை மலர் சூடுவதையும் கூறுவதாகக் காட்டுகிறார். வீரம், கற்பு, விருந்தோம்பல், முல்லை நிலத்து ஊர் பாடி, முல்லைக் கலியின் சமுதாயப் பின்புலம், நெடுநல்வாடை முல்லைத் திணை சார்ந்தது அல்ல, பாலைத்திணையின் பாற்பட்டது என, பல நிலைப்பாடுகள் இந்நூலில் விளக்கம் பெற்றுள்ளன. -முனைவர் மா.கி. இரமணன். நன்றி: தினமலர், 7/2/2016.