முழு மதுவிலக்கு அதுவே நமது இலக்கு

முழு மதுவிலக்கு அதுவே நமது இலக்கு, இரா. ரவிக்குமார், கொங்கு மண்டல ஆய்வு மையம், பக். 368, விலை 250ரூ.

மதுவை ஒழிக்க சட்டசபையில் என்ன செய்தீர்கள்? தமிழகத்தில் இன்று, மதுவுக்கு எதிரான போராட்டங்கள் உச்சத்தை எட்டியுள்ளன. மதுவிலக்கை அமல்படுத்தியே ஆகவேண்டும் என்ற சூழல் உருவாகி உள்ளது. இத்தகைய சூழலில் வெளிவந்திருக்கும் இந்த நூல், கவனம் பெறுகிறது. இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில் குறிப்பிடத் தக்கது, குடியரது இதழில், 1925, ஆக. 16ம் தேதி, ஈ.வே.ரா. எழுதி வெளியிட்ட தலையங்கம். கடந்த, 1880 – 81ம் ஆண்டில், 30.5 கோடி ரூபாய். 1910ல் 10 கோடி ரூபாய். 1918ல் 18.5 கோடி ரூபாய். 1924ல் 19.5 கோடி ரூபாய், மதுவால் அரசுக்கு கிடைத்த வருவாயைக் குறிப்பிடும், ஈ.வெ.ரா., மதுவை ஒழிக்கப் போவதாக கூறிய சட்டசபை உறுப்பினர்களை பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்- சட்டசபையிலேயே, குடிக்கும் மெம்பர் சில பேர்கள். சாராயக் கடை குத்தகை எடுத்துப் பிழைக்கும் மெம்பர்கள் சில பேர். கள்ளுக்கு மரம் குத்தகை விட்டு பணம் சம்பாதிக்கும் மெம்பர்கள் சில பேர், குடியினால் ஏற்படும் கொடுமைகளினால் பிழைப்பவர்கள் சில பேர், குடியை விளம்பரப்படுத்தி, நல்ல சாராயம், டாக்டர் சிபாரிசு செய்தது, உடம்புக்கு நல்லது என்று ஜனங்களைக் குடிக்கச் சொல்லிப் பிழைக்கும் மெம்பர்கள் சில பேர். இவர்கள், ஜனங்களுடைய பிரதிநிதி சபை என்று, மதுவை ஒழிப்பதாய், அங்கு போய் உட்கார்ந்து கொண்டு, தங்கள் பிள்ளைக்குட்டிகளுக்கும், இனத்தாருக்கும் பிழைப்புக்கு உத்தியோகம் சம்பாதிக்கப் பாடுபடுவதல்லாமல் வேறு என்ன பலனை உண்டாக்குகின்றனர்? கள்மரம் வளர்ப்பது நாம். சாராயம் காய்ச்சுவது நாம். விற்பது நாம். குடிப்பது ஏழைகள். யார் பேரில் குற்றம் சொல்வது? ஆகையால் யாராவது சட்டசபைக்கு போவதற்காக, ஏழை மக்களிடத்தில் வந்து, ஓட்டு கேட்பார்களானால், குடி விலக்க இந்த ஆறு வருஷ காலமாய் சட்டசபையிலும், வெளியிலும் என்ன செய்தீர்கள் என்று கேட்டு, வாக்காளர்கள் தங்கள் கடமையைச் சரியாய் செய்வார்களானால் மாத்திரம், சட்டசபையால் மதுபானம் ஒழிக்கலாம் என்று வாக்காளர்கள் நம்புவதற்கும், மதுபானம் ஒழியாவிட்டால் சர்க்கார் மீது குற்றம் சொல்வதற்கும் அர்த்தம் உண்டு. இவ்வாறு, ஈ.வெ.ரா. கூறி உள்ளார். மைசூரை ஆண்ட திப்பு சுல்தான், கடிதம் ஒன்றில் முழுமையான மது விலக்கைக் கொண்டு வருவதில் உள்ள பொருளாதார லாப – நஷ்டங்களுக்காக தயங்கவோ, ஒதுங்கவோ செய்வது, மக்களுக்கு நல்லதல்ல. மக்களின் உடல் நலம், வளமான வாழ்வு இவற்றை விட, நம் அரசு கஜானாவை நிரப்புவதை முக்கியமானதாக கருதுவது எப்படி சரியானதாகும் என்கிறார். சமீபத்தில் மது ஒழிப்பில் மரணம் அடைந்த, காந்தியவாதி சசிபெருமாள் பற்றிய குறிப்புகளும், படங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. -சி. கலாதம்பி. நன்றி: தினமலர், 2/6/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *