யுரேகா கோர்ட்
யுரேகா கோர்ட், இரா. நடராசன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 158, விலை 150ரூ.
2014ஆம் ஆண்டுக்கான குழந்தைகள் இலக்கியத்துக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் இரா. நடராசனின் சிறந்த படைப்பு. தொழில்நுட்ப வசதிகள் பெருகியதால் குழந்தைகளுக்கும் புத்தக வாசிப்புப் பழக்கம் குறைந்து வரும் இந்நாளில், அவர்களைப் படிக்க வைப்பதற்காக அறிவியலையும், செயல்விளக்கங்களையும் பயன்படுத்தியிருக்கும் உத்தி மிகவும் பிரமாதம். அவர்களைப் புத்தக வாசிப்புப் பழக்கத்திற்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்வதாக அமைந்துள்ள எழுத்து நடை, இந்நூலின் தனிச்சிறப்பு. கதைகளின் ஊடே அறிவியல் தகவல்களைப் பரிமாறுவது இந்நூலின் சிறப்பு. இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோஸ் சிறந்த இயற்பியலாளர் என்பது உலகறிந்ததே. ஆனால் ரேடியோவைக் கண்டுபிடிப்பதில் மார்க்கோனிக்கு உதவினார் என்பது வெளிவராத தகவலாகும். இப்படி குழந்தைகளுக்குத் தெரியாத பல அரிய தகவல்களைக் கதைகளுக்கு இடையே அளித்திருப்பது வித்தியாசமான அணுகுமுறை. அறிவியல் தகவல்களை மட்டும் அளிக்காமல் யுரேகா கோர்ட் எனும் ஒரு கற்பனை கோர்ட்டை உருவாக்கி, அதில் சிறுவர்களையும் ஓர் அங்கமாக்கியிருப்பது, ஆர்வத்தைத் தூண்டும் விதமாக உள்ளது. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு பரிசளிக்க வேண்டிய அறிவியல் கருவூலம் இந்நூல். நன்றி: தினமணி, 29/6/2015.