ரகசியமாய் ஒரு ரகசியம் (பாகம் 2)
ரகசியமாய் ஒரு ரகசியம் (பாகம் 2), ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 992, விலை 600ரூ.
தலைப்புக்கேற்ற நூல் அல்ல. ரகசியம் என்று கூறிவிட்டு, பல ரகசியங்களை வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டிருக்கிறார் தத்துவ ஞானி ஓஷோ. பெட்டைக் கோழியானது அதன் முட்டைகளை அடைகாத்து, குஞ்சு பொரிக்க முடிகிறது. ஏனெனில், அதன் இதயம் எப்போதும் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இது ஒரு முக்கியமான மந்திரச்சொல் என்று கூறும் ஓஷோ, இந்த மந்திரச் சொல்லின் ரகசியத்தைக் கதைப் பின்னலுடன் காது கொடுத்து கேட்கும் ஓர் இதயம் என்ற பகுதியில் பதிவு செய்துள்ளார். அன்புதான் பிரார்த்தனையின் மிக உயர்ந்த வடிவம். அன்பு என்பது ஒரு மலரைப்போன்றது என்றால், அதன் பின்னர் பிராத்தனை என்பது அந்த மலரின் நறுமணம் போன்றதாக இருக்கிறது. உன்னால் பிரார்த்தனை செய்ய முடியும் என்றால் வேறு எந்த சிகிச்சை முறையும் உனக்குத் தேவை இல்லை என்பதையும், பிரார்த்தனைக்கும் சிகிச்சைக்கும் உள்ள வேறுபாட்டையும், பிரார்த்தனையின் மகிமையையும் அன்புதான் ஒரே நண்பன் என்ற பகுதியில் விளக்கியுள்ளார். தனிமைக்கும் ஏகாந்தத்திற்கும் உள்ள வேறுபாட்டையும், ஏகாந்தத்தின் சிறப்பையும் ஏகாந்தமே முடிவானது என்கிற பகுதியில் விரித்துரைக்கிறார்.இவ்வாறு, 31 தலைப்புகளில் உள்ளே இதுபோன்ற பல ரகசியங்கள் பொதிந்து கிடக்கின்றன. இறுதி அத்தியாயமான ஆனந்தப் பரிமாணத்தில், மூன்று ‘க’ளைப் பற்றிக் குறிப்பிடும் ஓஷோ, இந்த மூன்றும்தான், என் போதனையின் அடிப்படை என்றும், அந்த மூன்று ‘க’ளையும் கற்றுக்கொண்டுவிட்டால், நிங்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு விடுகிறீர்கள் என்கிறார். அந்த மூன்று ‘க’கள் எவையெவை? அதுதான் ரகசியம்… படித்தறிய வேண்டிய ரகசியம். நன்றி: தினமணி, 6/1/2015