வள்ளுவர் காட்டும் உவமைகள்

வள்ளுவர் காட்டும் உவமைகள்,  பு.சி. இரத்தினம்,  மணிமேகலை பிரசுரம், விலை 90ரூ.

உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு இல்லாத சிறப்புகளே இல்லை எனலாம். ஏழு சீர்களில், உலகமே வியக்கும் படியான பல கருத்துகளைக் கூறியுள்ள நுால் திருக்குறளாக இருப்பதால், பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சீரிய கருத்துகளைக் கூற வந்த திருவள்ளுவர், அக்கருத்தை மேலும் தெளிவாக உணர, பல உவமைகளையும் கூறி விளக்குகிறார். உவமைகள் பாடல்களுக்கு மேலும் அழகு தருவதால், அவை அணிகளாகின்றன.

பிறருக்கு உதவி செய்பவரிடம் உள்ள செல்வம், ஊர் நடுவே பயன்மரம் பழுத்தது போல என்றும் (குறள் 216), பிறருக்குச் சிறிதும் உதவாத காரணத்தால், பிறரால் விரும்பப்படாதவன் பெற்ற செல்வம், ஊரின் நடுவிலிருக்கும் நச்சு மரம் பழுத்தது போல என்றும் (குறள் 1,008), தீயவர்களைத் தண்டித்து, நல்லவரைக் காப்பது என்பது, உழவன் களையைக் களைந்து பயிர்களைக் காப்பது போல என்றும் (குறள் 550), ஆசிரியர் விளக்கிச் செல்லும் முறை, படிப்போருக்கு மிக்க இன்பம் தரும் என்பது உறுதி.

இந்நுாலாசிரியர் திருக்குறள் கருத்துகளை விளக்கும் சில இடங்களில், நாலடியார், திருமந்திரம், திருவாசகம், திருவெம்பாவை ஆகிய நுால்களின் பாடல்களையும் ஒப்பிட்டுக்கூறுவது, அவரின் நுண்மாண் நுழைபுலத்திற்கு எடுத்துக்காட்டுகள். நுாலாசிரியர் சில குறள்களை விளக்கும்போது, அல்லவை செய்யும் அரசியல்வாதிகளுக்கு தக்க தண்டனை எப்போது? என்றும் (பக்., 8), வள்ளல் தன்மையோடு பணத்தைக் கொடுக்க மனமில்லாதவர்கள், கல்வியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் (பக்., 16), கல்வி என்பது இன்று ஒரு சிறந்த வணிகம் என்றும் (பக்., 32), அன்றைக்கு மன்னராட்சி பரம்பரைக் குடும்ப ஆட்சியாக இருந்தது, இன்று மக்களாட்சி பரம்பரைக் குடும்ப ஆட்சியாக மாறிக் கிடக்கிறது என்றும் (பக்., 61), நாட்டின் இன்றைய அவல நிலையைக் கூறுவதை யாரால் மறுக்க இயலும்? நல்ல பயனுள்ள நுால்.

– பேரா., டாக்டர் கலியன்சம்பத்து.

நன்றி: தினமலர்.


இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *