108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்கள்

108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்கள்,  இரா.இளையபெருமாள்,  சகுந்தலை நிலையம், பக்.440. விலை ரூ.300.

மானிட சரீரத்தோடு போக முடியாத திருப்பாற் கடல், இப்பூவுலகில் இல்லாத திருப்பரமபாதம் ஆகிய இரு திவ்ய தேசங்கள் உட்பட, 108 திவ்யதேசங்களைப் பற்றிய விரிவான நூல் இது.

சோழநாட்டுத் திருப்பதிகள், நடுநாட்டுத் திருப்பதிகள், தொண்டைநாட்டுத் திருப்பதிகள், வடநாட்டுத் திருப்பதிகள், மலைநாட்டுத் திருப்பதிகள், பாண்டிய நாட்டுத் திருப்பதிகள், திருநாட்டுத் திருப்பதிகள் ஆகிய தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டு, இந்த திருப்பதிகள் – திவ்ய தேசங்கள்- அமைந்திருக்கும் இடம், அதற்குச் செல்லும் வழிகள், போக்குவரத்து வசதிகள், திவ்ய தேசத்தில் உள்ள மூலவர், உத்ஸவர், தாயார், திவ்ய தேசத்தில் உள்ள தீர்த்தங்கள், திவ்ய தேசத்தின் ஸ்தல விருக்ஷம், விமானம், ப்ரத்யக்ஷம், மங்களாசாசனம் என திவ்ய தேசம் தொடர்பான அடிப்படைத் தகவல்களை இந்நூல் தருகிறது.

அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு திவ்ய தேசத்தின் சிறப்புகள், அங்குள்ள சந்நிதிகள், அவை எந்தக் காலத்தில் உருவாக்கப்பட்டன, திவ்ய தேசத்தில் திருப்பணிகள் செய்த மன்னர்கள், திவ்ய தேசம் இடம் பெற்றுள்ள இலக்கியங்கள், அவற்றின் வரலாறு என திவ்யதேசம் பற்றிய அனைத்துத் தகவல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

இவை தவிர, 20 புராண ஸ்தலங்கள் மற்றும் 26 அபிமான ஸ்தலங்கள் பற்றிய தகவல்களும் தரப்பட்டுள்ளன. மஹாவிஷ்ணுவின் சயனத் திருக்கோலங்களை எங்கெல்லாம் பார்க்கலாம் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. வைணவ ஆலயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும் அரிய கையேடு.

நன்றி: தினமணி, 20/11/2017,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *