63 நாயன்மார்கள்

63 நாயன்மார்கள், சிவ.சுந்தரம், சுந்தரா பதிப்பகம், பக். 496, விலை 330ரூ.

முக்கடவுள்களில் சிவனையே முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபட்டு, சிவனை நேரில் கண்டும், அசரீரி வாக்கைக் கேட்டும் வாழ்ந்த 63 நாயன்மார்களைப் பற்றி, முதலில் சுந்தரரால் பாடப்பெற்றது ‘திருத்தொண்டர் தொகை’. அதன் பிறகு 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தெய்வப் புலவர் சேக்கிழார், இந்த நாயன்மார்களைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு, அவர்கள் வாழ்ந்த தலங்களுக்கெல்லாம் சென்று தகவல்களைச் சேகரித்து, நான்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களடன் ‘பெரிய புராணம்’ என்ற மகாகாவியத்தை இயற்றினார்.

இதில் உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி, கற்றறிந்தவர், கல்லாதவர் என்ற பாகுபாடில்லாமல் 63 நாயன்மார்களிடமும் சிவன் அருள் பாலிப்பதைக் காண முடிகிறது. இந்நூலில் இரண்டாவதாக வரும் இயற்பகை நாயனார், தன்னை நாடி வரும் சிவனடியார்கள், எதைக் கேட்டாலும் தரும் கொள்கையுடையவர். அவரைச் சோதிக்க ஒரு சிவனடியார் தோற்றத்தில் வந்த சிவன், அவரது மனைவியைத் தனக்குத் தரும்படி கேட்க, அந்த நாயனார் எந்தத் தயக்கமுமின்றி மனைவியைத் தந்து, அதைத் தடுக்க வந்த தன் உறவினர்களையும் சண்டையிட்டு விரட்டியடிப்பார். இவரின் இத்தகைய கொள்கையையும், சிவன் மீதான பக்தியையும் மெச்சி, சிவன் அவருக்குக் காட்சி அளிப்பார்.

இப்படி ஒவ்வொரு நாயன்மார்களைப் பற்றியும், அவர்கள் வாழ்ந்த மற்றும் இறைவனடி சேர்ந்த ஆலயங்களின் சிறப்புகளையும் இந்நூல் விளக்குவதோடு, அத்தலங்களுக்குச் செல்லும் வழித்தடங்களையும் எளிய முறையில் கூறுகிறார் இந்நூலாசிரியர். இதுதவிர ஒவ்வொரு தலங்களுக்கு அருகாமையில் உள்ள மற்ற திருக்கோவில்களையும், அவற்றின் சிறப்புகளையும் விவரித்துள்ளது ஹிந்து மதப் பக்தர்களுக்குப் பயன் தரத்தக்கது.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 5/9/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *