தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் மு. அருணாசலம், பேராசிரியர் இராஜா வரதராஜா,  அருண் பதிப்பகம், திருச்சி 1, பக்கம் 672, விலை 125 ரூ.

தமிழர்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுபவை தமிழ் இலக்கியங்கள். அவை காலத்தால் அழிந்துவிடாதபடி தமிழின் இலக்கிய வரலாறு முறையாகப் பதிவு செய்யப்பட்டு அதன் பயனை எல்லோரும் அனுபவிக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் பதிவு செய்தவர் தமிழறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை, அவருக்குப் பின் மு. அருணாசலம், மு. வரதராசன், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், க. வெள்ளை வாரணர் போன்ற தமிழறிஞர்கள் கால மாற்றத்திற்கு ஏற்ப பல கூடுதல் தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். தமிழ் இலக்கியத்தைக் கால வரிசைப்படி பதிவு செய்வது மிகவும் அவசியம். அந்தவகையில், தொடர்ந்து பலர் இப்பணியில் ஈடுபட்டு புதிய புதிய படைப்பாக்கங்களைப் பதிவு செய்த வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் இந்நூல் புதிய வரவு. கூடுதல் தகவல் என்ன பதிவாகியுள்ளது என்றால், நாவல், நாடகம், சிறுகதை, புதுக்கவிதை, ஹைக்கூ, பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கியம், ஊடகத் தமிழ், திரைப்படத் தமிழ், திரையிசைத் தமிழ், புலம் பெயர்ந்தோர் இலக்கியம், திருநங்கைகள் இலக்கியம் என சமகாலத்தில் உருவான படைப்பாளிகள் மற்றும் அவர்களுடைய படைப்புகள் என அனைத்தும் பதிவாகியுள்ளன. அது மட்டுமல்ல, போட்டித் தேர்வுக்குப் பயன்படும் வகையில் இலக்கிய வினா விடை, சாகித்திய அகாதெமி விருதுபெற்றவர், மொழிபெயர்ப்புக்கான விருது பெற்றவர், நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், உலகத் தமிழ் மாநாடுகள் எனக் கூடுதல் தகவல்கள் நூலை மேலும் மெருகேற்றியுள்ளன.  

நலமறிய ஆவல், பட்டுக்கோட்டை பிரபாகர், விகடன் பிரசுரம், சென்னை – 2, பக்கம் 232, விலை 100 ரூ.

பட்டுக்கோட்டை பிரபாகரின் விறுவிறுப்பான நடையில் 40 தலைப்புகளில் அற்புதமான தகவல் பெட்டகமாக வந்திருக்கும் கட்டுரைகளின் நறுக்கான தொகுப்பு இந்நூல். ஆசிரியர்கள், சிறுவயதில் மாணவர்களை மரம் தன் வரலாறு கூறுதல் என்ற பாணியில் எளிதில் மனதில் பதியவைக்கும் முறையில் கட்டுரை எழுதச் சொல்வார்கள். அதே உத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு வாசகர்களின் மனதை அசைத்துப் பார்க்கும் சூட்சுமத்தை இந்நூல் மூலமாகச் செய்திருக்கிறார் நூலாசிரியர். நூலைக் கையில் எடுத்ததும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடத் தோன்றுகிறது. அலைபேசியில் தொடங்கி முகமூடியில் முடித்திருக்கிறார். எச்சரிக்கை என்ற தலைப்பில், எந்தவித நோயுமில்லாத 10 வயதுச் சிறுவனுக்கு அன்னாசிப் பழம் விற்பவரால் வந்த எய்ட்ஸ் பற்றிக் கூறி நம்மை எச்சரிக்கிறார். கிரைம் நாவல் எழுதும் இவர்தானா மனதைக் கட்டிப்போடும் கட்டுரையாளர் என்பதை நம்பமுடியவில்லை. பொதுநலம், பேராசை, நன்றி, பொறாமை, கடன், காதல், முதியோர் இல்லம் போன்ற தலைப்புகளை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்து, ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்நூலை அனைவரும் அலுப்புத் தட்டாமல் வாசிக்கலாம். நன்றி: தினமணி 17-09-12  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *