தமிழர் உணவு

தமிழர் உணவு, தொகுப்பாசிரியர் பக்தவத்சல பாரதி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக்கம் 415, விலை 250ரூ.

பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில் உணவைப் பசிக்காகவோ, ருசிக்காகவோ உண்பது என்ற நிலை மாறிவிட்டது. அன்றாட நாளில் அதுவும் ஒரு கடமையாகவே கழிகிறது. உணவு என்பது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவது போன்ற விஷயம் அல்ல. அது சமூகம் சார்ந்தது. உணவும் சமூகமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை என்ற கருத்தை இன்றைய தலைமுறையினருக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில், தமிழர்களின் உணவு முறைகளை நூலாகத் தொகுத்துள்ளார் பக்தவத்சல பாரதி. ஈழத்தில் உணவு, புலம்பெயர்ந்தோர் உணவு, இஸ்லாமிய உணவு, செட்டி நாடு உணவு முதலிய 35 கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. கிராமத்தில் கள்ளும் ஒரு உணவாகவே பார்க்கப்படுகிறது. பனங்கள், தென்னங்கள் தவிர, ஈச்சமரம், வேப்பமரம், அரசமரம், சப்பாத்திக்கள்ளியிலும் கள் ஊறும். வேப்பங்கள் மருந்தாகப் பயன்படுகிறது என்பன போன்ற புதிய தகவல்களும் பரிமாறப்பட்டுள்ளன. வீட்டுத் தோட்டத்து காய்கறி சமையலும் இருக்கிறது. முனியாண்டி விலாஸும் இடம் பிடித்துள்ளது. பரோட்டாவின் அமைப்பும் கூறப்பட்டுள்ளது. சாப்பிடும் இலை தொடங்கி, சைவ, அசைவ உணவுகள், புளித்த மோர், நிலாச்சோறு, வெற்றிலை வரை அனைத்தின் பண்புகளும் விரிவாக அலசப்பட்டுள்ளன. படிக்க படிக்க நாவில் எச்சில் ஊற வைக்கும் நூல்.  

 

திருமந்திர நெறி, ஜி, வரதராஜன், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை -14, பக்கம் 176, விலை 75 ரூ.  

‘நெறி’ என்றால் சமயக் கொள்கைக்காகவோ தனிமனித ஒழுக்கத்துக்காகவோ ஏற்படுத்தப்பட்ட விதி அல்லது முறை எனப்படும். திருமூலர் தாம் அருளிய வாயிலாக இத்தகைய வழிமுறைகளை அருளிச் செய்துள்ளார். பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக உள்ளது திருமூலரின் மந்திரம். திருமூலர் அருளிச்செய்த திருமந்திரம் தோத்திர நூலாகவும் சாத்திர நூலாகவும் திகழ்கிறது. எல்லா சமயங்களும் மதங்களும் இறைவனை அடைவதற்குரிய வழியாக, அன்பையே வலியுறுத்திக் கூறி நெறிப்படுத்துகின்றன. அந்த வகையில் திருமந்திரம் சைவர்களுக்கு முதன்மையானதாகத் திகழ்கிறது. ஒன்பது தந்திரங்களைக் கொண்டு மூவாயிரம் பாடல்களுடன் விளங்கும் திருமந்திரம் கடவுள் தத்துவம், சிவ பெருமானின் அருள் செயல்கள், சிவனின் வீரதீரச் செயல்கள், ஞானம், தவம், யோகம், மந்திரம், அறவாழ்வு போன்ற அனைத்தையும் கூறுகிறது. குறிப்பாக சைவ சித்தாந்தத் தத்துவங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. முழுவதும் படிக்க இயலாதவர்களுக்காக திருமந்திரத்தைச் சாறுபிழிந்து தந்திருக்கிறார் நூலாசிரியர். இன்றைய சமுதாயம் பயன்பெறும் வகையில் ‘திருமந்திரமும் இன்றைய சமுதாயமும்’ என்ற 13வது தலைப்பில் அமைந்த கட்டுரை வெகு சிறப்பாக விளக்குகிறது. இதில், செக்ஸ், கல்வி, கணவன்-மனைவி தாம்பத்தியம். கரு உற்பத்தி, குழந்தை பிறப்பு, குடும்பக்கட்டுப்பாடு ஆகிய இன்றைக்கும் என்றைக்கும் பயன்படக்கூடிய அனைத்து விவரங்களும் அடங்கியுள்ளன. சிறந்த திருமூலக் கருவூலம். நன்றி: தினமணி 19-03-2012    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *