எம்.ஆர். ராதா வாழ்க்கையும் சிந்தனையும்
எம்.ஆர். ராதா வாழ்க்கையும் சிந்தனையும், விந்தன், தோழமை வெளியீடு, 5 டி, பொன்னம்பலம் சாலை, கே. கே. நகர், சென்னை – 78, விலை 80 ரூ.
பெரியாருக்கு சினிமா பிடிக்காது. அவருக்குப் பிடித்த சினிமாக்காரர் எம்.ஆர்.ராதா. ராதா தன்னுடைய வாழ்க்கையை சினிமாவுக்காக அர்ப்பணித்தவர். ஆனால், அவருக்கு சினிமாக்காரர்களைப் பிடிக்காது. காரணம், அவர்களிடம் இருந்த போலித்தனம். அந்த போலித்தனம் சிறிதும் இல்லாமல் வாழ்ந்தவர்தான் ராதா. “வீட்டிலே சோறில்லை. டிராமா கம்பெனியைத் தேடிக்கிட்டுப் போவேன். அங்கேதான் நல்ல சோறு கிடைக்கும் சுருக்கமாச் சொன்னா, பாய்ஸ் கம்பெனி சோறுதான் இன்னிக்குப் பலரைக் கலைஞர்களாக்கி இருக்கிறது. ‘ஃபேக்ட்’டை யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்க. வசதி வந்ததும் ‘ஹிஸ்டரி’யையே மாத்திச் சொல்றானுங்க. ‘ராயல் ஃபேமிலி’ங்கிறாங்க. கலைக்காகவே அவதாரம் எடுத்ததா அளக்கிறானுங்க. என்ன செய்றது? உண்மை உறங்குது. பொய் பொன்னாடை போத்திட்டு ஊர்வலம் வருது” என்று சொன்ன ராதாவிடம், “கலைஞன் என்பவனுக்கு இலக்கணம் ஏதாவது உண்டா?” என்று கேட்கிறார்கள். “உண்டு, பஞ்சமா பாதகத்தில் அவன் ஒரு பார்ட்னர்” என்கிறார் பளிச்சென. சினிமாக்காரர்கள், மீடியாக்களின் முன்னால் பிறந்த நாள் கேக் வெட்டுவதில் தொடங்கி, சிலருக்கு உதவிகள் செய்வதையே பெரும் பரபரப்பாகக் காட்டிக்கொள்வது வரை இன்று நடக்கும் அத்தனை கேலிக்கூத்துக்களுக்கும் உள்ளேயே இருந்து கொட்டு வைத்த கலைஞன் ராதா. அதனாலேயே அவர் வாழ்ந்த காலத்தில் ஒதுக்கப்பட்டார். ராமாவரம் தோட்டத்தில் நடந்த சம்பவத்துக்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ராதா, வெளியே வந்த பிறகு எழுத்தாளர் விந்தனுக்குக் கொடுத்த நீண்ட பேட்டிதான் இந்தப் புத்தகம். “நான் சாதாரண ஆக்டர், நீங்களெல்லாம் பேசுற பேச்சுக்கு கொஞ்சம் பாலிஷ் கொடுத்து மேடையில பேசுறவன். அவ்வளவுதான் வித்தியாசம். ஆக்டர்னா நீங்க ஓவரா நினைச்சிடாதீங்க” என்ற பீடிகையுடன் பேசத் தொடங்கிய ராதா, தான் எவ்வளவு பெரிய மேதமை உள்ளவன் என்பதை ஒவ்வொரு வார்த்தையிலும் நிகழ்விலும் நிரூபித்துக்கொண்டே போகிறார். அவருக்கு யார் மீதும் விருப்பு, வெறுப்பு, தயவு தாட்சண்யம் இல்லை. மனதில் பட்டதை பட்டவர்த்தனமாகச் சொல்கிறார். தனது தலைவராகவே இருந்தாலும் பெரியாரின் கஞ்சத்தனத்தை விமர்சிக்கிறார். அன்றைய (1971) முதலமைச்சராக இருந்தாலும் கருணாநிதியைப் பற்றிச் சொல்லும்போது, “என் கம்பெனி ஆக்டர் முதலமைச்சராகி இருக்கிறார் என்றால், அதிலே எனக்குப் பெருமைதானே?” என்று சாதாரணமாகச் சொல்கிறார். நல்ல முடிவுகள் எடுத்தாலும் அண்ணா அதில் உறுதியாக இருக்க மாட்டார் என்கிறார். தன்னுடைய குருநாதர் என்.எஸ்.கேவைச் சுடுவதற்காக துப்பாக்கி வாங்கிய கதையை மறைக்கவில்லை. இப்படி எல்லாவற்றையும் அப்பட்டமாகத் திறந்து பேசும் கலைஞன், ராதாவுக்கு முன்பும் பின்பும் யாரும் இல்லை. “நாடகம் சிலருக்கு கலையாய் இருக்கும். சிலருக்குத் தொழிலாய் இருக்கும். எனக்கோ அது கலையாகவும் தொழிலாகவும் மட்டுமல்ல… அது சமூக சீர்திருத்தத் தொண்டாக இருந்தது’’ என்று அவரே சொல்லிக்கொண்டது மாதிரி… அவரது வாழ்க்கையே சமூக சீர்திருத்த வரலாறாக அமைந்துவிட்டது. “யாரையும் எதற்கும் தட்டிக்கேட்கும் தைரியம் எனக்குத்தான் உண்டு” என்கிறார் ராதா. அது உண்மை என்பதை உணர்த்துகிறது இந்தப் புத்தகம். – புத்தகன்
—
அணு ஆட்டம், சு.ப. உதயகுமாரன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை -600002, விலை 85 ரூ.
கொந்தளிக்கும் கூடங்குளம்… எரிமலையாகும் இடிந்தகரை… ஏன் இந்தக் கதறல்? அணுக் கொடூரத்தின் அவலத்தை விவரிக்கும் பொளேர் புத்தகம்… நன்றி: ஜூனியர் விகடன் 23/09/12