இதயம் காப்பது எளிது

ஸ்ரீராமாநுச நூற்றந்தாதி, தி. பாஷ்ய ராமாநுசதாசன், விக்னேஷ் வெளியீடு, 26 – நியூ காலனி, ஜோசியர் தெரு, சென்னை – 34, பக்கம் 160, விலை 100 ரூ.

  வைணவர்கள் தலைவணங்கிப் போற்றும் தூய தலைவர் ராமாநுசர். அவரைப் போற்றி, திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த அந்தாதி நூல் இது. இந்நூலில் 108 பாடல்கள் அந்தாதி முறையில் பாடப்பெற்றுள்ளன. உரையாசிரியர் வைணவக் கொள்கைகளைப் பரப்பும் பணியினை மேற்கொண்டவர். ராமாநுசர் பெயரால் அவர் பிறந்த ஸ்ரீபெரும்புதூரில் நுழைவுவாயில்கள் அமைத்தவர். வைணவக் கொள்கைகளில் தெளிந்த அறிவு கொண்டு ஆழங்கால்பட்டவர், ‘இறையன்பர்களாம் பக்தர்களை மதிக்காமல் தாழ்வாகப் பேசுவோர் உடனே சண்டாளர்களாகிவிடுகிறார்கள்’ என்ற கருத்துடைய உரையாசிரியர், பக்தி சிறப்போடு தெளிவாக விளக்கவுரை எழுதியுள்ளார். நாதமுனிகள், மணக்கால் நம்பி, கூரத்தாழ்வார், நம்மாழ்வார் முதலான ஆழ்வார்கள் ஆகியோரின் கருத்துகளை ஒப்பிட்டு விளக்கும் முறை நன்று. இது ஒரு பக்தி நூல். நல்ல நூல். சிறந்த உரையெழுதியுள்ள உரையாசிரியரைப் பாராட்டலாம். நன்மைகளைப் பெறலாம். – ம. நா. சந்தானகிருஷ்ணன்  

சாணக்கிய நீதி, தமிழாக்கம் என். ஸ்ரீதரன், கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளுதெரு, தியாகராய நகர், சென்னை-17, பக்கம்-204, விலை 60 ரூ.

  விஷ்ணுகுப்தர் என்ற இயற்பெயர் கொண்ட சாணக்கியர், இந்திய நாட்டின் மாமேதைகளுள் ஒருவர் என்பதில் ஐயமில்லை. தற்போதுள்ள பீகார் மாநிலமே, அக்கால மகத நாடாகும் என்பர். சந்திரகுப்த மன்னரைச் செதுக்கி வல்லவனாக மாற்றிய பெருமை, இவருக்கே உரியது என்பர். இந்நூலில், 17 அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயமும் படிக்க படிக்க மிகவும் சுவையான செய்திகளைத் தருகிறது. நம்மையே பரிசோதித்து திருத்திக்கொண்டு, வாழ்வில் ஏற்றம் காண, சாணக்கியரின் நீதிகள் பலவும் உதவும் என்று, உறுதியாகக் கூறலாம். எளிய தமிழில் இந்நூல் அமைந்துள்ளதால் அனைவரும் படித்து பயனடையலாம்.  

இதயம் காப்பது எளிது, டாக்டர். க. மகுடமுடி, மகுடம் பதிப்பகம், வடக்கந்தல் அஞ்சல் – 606 207, கள்ளக்குறிச்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம், பக்கம் 260, விலை 225 ரூ.

உடலின் மையம் இதயம். இதன் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். இதயத்தைப் போற்றிப் பாதுகாக்க ஒவ்வொருவருக்கும் மருத்துவ அறிவியல் ஞானம் அவசியம். ஆங்கிலத்தில் இந்தத் துறையில் பல நூல்கள் உள்ளன. ஆனால், தமிழில் மிகக் குறைந்த அளவே நூல்கள் உள்ளன. நூலாசிரியர் மருத்துவம் படித்தவர் என்பதுடன், மருத்துவப் பணியில் நிரம்ப அனுபவம் உடையவர். எளிய தமிழில் மருத்துவ அறிவியல் விஷயங்களை, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதவும் தெரிந்தவர் என்பதை இந்தப் புத்தகத்தைப் படிக்கையில் தெரிந்துகொள்கிறோம். பயனுள்ள நல்ல புத்தகம், ‘மாரடைப்பு’ எனும், ‘ஹார்ட் அட்டாக்’ வராமல் தடுத்துக்கொள்ள நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை, மேற்கொள்ளவேண்டிய முன் எச்சரிக்கைகளை மிக நன்றாக எடுத்துக் கூறியிருக்கிறார். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இது போன்ற அறிவியல் விழிப்புணர்ச்சி ஊட்டவேண்டிய நூல்கள் தேவை. இந்த மருத்துவ எழுத்தாளரை ஊக்குவிக்க வேண்டும். – வி. பாலு நன்றி: தினமலர் 29-01-12      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *