எனக்குள் ஒரு கனவு

எனக்குள் ஒரு கனவு, ராஷ்மி பன்சால், தமிழில் ரவி பிரகாஷ், விகடன் பிரசுரம், பக்கம் 470, விலை 175 ரூ.

சிறுவனாய் இருந்தபோது, தீண்டத்தகாதவரைத் தொட்டுவிட்டதால், அவனைத் தூய்மைப்படுத்த, அவன் பாட்டி அவனைப் பசுவின் சாணத்தைத் தின்னச் சொன்னதை அவன் மறக்கவில்லை. அவன் வளர்ந்து பெரியவனாகியபோது மனிதக் கழிவை மற்றொரு மனிதன் சுத்தம் செய்வதா? என மிக நொந்து, அதற்காக நவீன கழிப்பறைகள் வடிவமைத்து ‘சுலப்’ என்ற ஓர் இயக்கத்தைத் துவங்கி நடத்திவருகிறார் பிந்தேஷ்வர் பதக். இவர் முயற்சி கழிப்பறைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி ஒரு மையம் அவற்றைக் கழுவி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தான இடத்தை ஏற்படுத்தித் தந்தது. இவரைப் போலவே, குப்பை பொறுக்கும் சிறுவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டு, அவர்களின் முன்னேற்றத்திற்காகவே நிறுவனம் துவங்கிய அ னிதா அஹிப்ஜா. இப்படி இந்த நூலில் இடம் பெற்றுள்ள 20பேர்களின் வித்தியாசமான வெற்றிக் கனவுகளைப் படிக்கும்போது, நம்மால் பிரமிக்காமல் இருக்க முடியாது. காரணம், இவர்கள் எல்லாருமே தாங்கள் கற்ற, நிர்வாக இயலின் கொள்கையைத் தங்கள் சுய முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தாமல், மனித குலத்திற்குச் சேவை செய்து வெற்றிகரமாக வரும் சமூகத் தொழிலதிபர்கள்‘ ராஷ்மி பன்னல் ஆங்கிலத்தில் எழுதிய ‘எ லவ் எ டிரீம்’ என்ற நூலின் தமிழாக்கம்தான் இந்த நூல். ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்ற உணர்வைத் தூண்டும் நூல். – கேசி  

 

தமிழ் நூற்பதிப்புப் பணியில் உ.வே.சா.

பழந்தமிழ் ஏட்டுச்சுவடிகளை, ஊர் ஊராய் அலைந்து தேடிக் கண்டெடுத்து மீட்டு, அவற்றை அச்சில் ஏற்றித் தமிழைக் காத்து, பெருந்தகை தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சா.வின் பதிப்புப் பணியைப் பாட விமர்சனவியல் நோக்கில், இலங்கை – ஈழத்தமிழறிஞர் கா. சிவத்தம்பி ஆழ்ந்து , ஆய்ந்து இந்நூலை ஆக்கித் தந்துள்ளார். உ.வே.சா., போலவே சி.வை. தாமோதரம் பிள்ளையும் தமிழ்நூல்களை மீளப் பதிப்பித்தவர் என்னும் சிறப்புக்குரியவராவார். சீவகசிந்தாமணி (1887), சிலப்பதிகாரம் (1892), புறநானூறு (1894), பத்துப்பாட்டு (1889) ஆகியவையும், உ.வே.சா.விற்குப் பெரும் புகழைத் தேடித்தந்த பதிப்புகளும் முக்கியமானவை. ஐயரவர்களின் ஈடுபாடு சமண, பவுத்த மதங்களை அறிவதில் பெரிதும் காணப்பட்டது. உ.வே.சாவிற்கு இலங்கை அறிஞர்களும் உதவியுள்ளனர். தமிழின் நவீனமயமாக்கம், தமிழகத்தில் நடந்தேறியதிலும், பார்க்க மிக ஆழமாகவும், அதே வேளை மிக்க விரைவுடனும் இலங்கையில் நடைபெற்றதெனலாம். இப்படிப் பல அரிய கருத்துகளை அறிய நூலைப் படிப்பது அவசியம். – கவிக்கோ ஞானச்செல்வன் நன்றி: தினமலர் 14-10-12      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *