திருமாலை
தேவை தலைவர்கள், வேங்கடம், விகடன் பிரசுரம், சென்னை – 2, பக்கம் 199, விலை 85 ரூ.
இமாலய சவால்களை எதிர்கொள்ள விரும்பும், துணிச்சல் மிக்க இளைஞர்களுக்கான நவீன அர்த்த சாஸ்திரம் என்ற துணைத் தலைப்புடன் வெளிவந்துள்ள நூலில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் கட்டுரைகள் உள்ளன. புத்தகத்தின் பாதிக்கு மேல் கேள்வி – பதில் பாணியில், சில அரசியல் கட்சித் தலைவர்கள், சில அரசியல் கட்சிகளின் போக்கு, செயல்பாடு பற்றியும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
—
திருமாலை, தி. பாஷ்ய ராமானுசதாசன், விக்னேஷ் வெளியீடு, சென்னை – 4, பக்கம் 144, விலை 80 ரூ.
விப்ர நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட, தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடிய பிரபந்தமே திருமாலை என்ற இந்த நூல். இதற்கு, பெரியவாச்சான் பிள்ளை எழுதிய உரையை, வைணவ உலகே பெரிதும் பாராட்டியிருக்கிறது. அந்த உரையை பெரும்பாலும் தழுவி, 45 கட்டுரைகளை பக்தியைக் குழைத்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர். வைணவ அன்பர்களுக்கு ஒரு நல்விருந்து. – மயிலை சிவா
—
போடோ சிறுகதைகள், இராம. குருநாதன், ஆங்கிலத்தில் ஜெய்காந்த் சர்மா, சாகித்ய அகாடமி, டில்லி, பக்கம் 80, விலை 70 ரூ.
வடக்கு வங்காளம், அசாமில் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு மற்றும் வங்க தேசத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் வாழும் போடோ இனப்பழங்குடியினர் பேசும் போடோ மொழியில், 1924 இல் தான் முதல் இலக்கியம் தோன்றியது. 1979ல் தான் முதல் சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. இலக்கியத்தின் மிகவும் பின்தங்கியுள்ள போடோ மொழியில் வெளியான 11 சிறுகதைகள், ஆங்கில மூலம் வாயிலாகத் தமிழாக்கம் செய்யப்பட்டு, இதில் தொகுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான சிறுகதை ஆசிரியர்கள் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களாக உள்ளனர். ‘போடோக்கள் இப்போது இருட்டில் இருக்கின்றனர். அவர்களுக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது’ என்னும் கருத்தமைந்த ‘மழுங்கியவாள்’ சிறுகதை, அம்மொழி இலக்கிய வளர்ச்சி பெறவேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது. பிறமொழி இலக்கிய ஆய்வாளர்களுக்கு உதவக்கூடிய நூலிது. – பின்னலூரான் நன்றி: தினமலர் 14-10-12