எப்படி ஜெயித்தார்கள்?
எப்படி ஜெயித்தார்கள்? ரமணன், புதிய தலைமுறை வெளியீடு, 25 ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டு தாங்கல், சென்னை – 32, விலை 100 ரூ.
தொழில் முனைவோரின் வெற்றிக் கதைகளை தம்பட்டக் கதைகளாகத் தராமல் வியூகங்களாக விரிக்கிறது நூல். தமிழ் தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகள் என்றாலே அவை தொழில்முனைவோரின் குடும்பக் கதை என்கிற அளவிலேயே சுருங்கி இருக்கும் என்பது எழுதப்படாத விதி. மாறாக, அத்தொழில்முனைவோர் எத்தகைய வியூகங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆராய்கிறது இந்நூல். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், யுனிவர்செல், ராம்ராஜ் காட்டன், கே.பி. என். டிராவல்ஸ், அருண் ஐஸ்கிரீம், சவேரா ஓட்டல், ஆச்சி மசாலா, சுகுணா சிக்கன் ஆகிய எட்டு நிறுவன அதிபர்களின் வெற்றிக் கதைகள் இதில் தரப்பட்டுள்ளன. காலாவதியான பொருட்கள் வாடிக்கையாளர்களை அடையாமல் தவிர்ப்பதற்காக கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பயன்படுத்தும் மென்பொருள், தயாரிப்பு ரகசியத்தை ஊழியர்கள் அறியா வண்ணம் பின்பற்றப்படும் ஷிஃப்ட் முறை ஆகியவை வாசகரைக் கவரும். யூரேகா ஃபோர்ப்ஸ் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்றிய சதீஷ்பாபு, ரூ. 600 கோடி மதிப்புள்ள யுனிவர்செல் நிறுவனத்தை உருவாக்கிய கதை சுவையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அவருக்கு தனியார் நிதியம் (பிரைவேட் ஈக்விட்டி) கிடைத்த கதை. வெள்ளை வேட்டி உடுத்துவோருக்குத் தோதாக வெள்ளை பெல்ட்டை அறிமுகம் செய்த ராம்ராஜ் காட்டன் நிறுவன உரிமையாளர் நாகராஜின் மார்க்கெட்டிங் தந்திரம் சுவையாக இருக்கிறது. “பேருந்து இருக்கையின் கீழ் கழற்றிவிடப்பட்ட செருப்பு, கடைசிவரை இடம் மாறாமல் இருந்தால் ஓட்டுநர் பேருந்தை ஒழுங்காக ஓட்டியிருக்கிறார் என்று பொருள்” என்ற கே.பி.என். நிறுவன உரிமையாளர் கே.பி. நடராஜனின் சூத்திரம் சுவையோ சுவை. தாஸப்பிரகாஷ் போன்ற ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் ஏன் கப்பல் ஊழியர்களுக்கு ஐஸ்கிரீம் சப்ளை செய்வதில்லை என்பதை உள்ளூர் கப்பல் முகவர்கள் மூலம் கேட்டுத் தெரிந்துகொண்ட சந்திரமோகன், கப்பல்களுக்கு ஐஸ்கிரீம் சப்ளை செய்திருக்கிறார். வெஸ்டர்ன் மியூசிக், நைட் கிளப், டிஸ்கோ ஆகியவற்றை நீனா ரெட்டி, 1970களிலேயே சவேரா ஓட்டலில் அறிமுகப்படுத்தியது வியக்க வைக்கும் தகவல். ‘பிராண்டு பெயர் எளிமையாக இருக்கவேண்டும்’ என்று ஆச்சி மசாலா பத்மசிங் ஐசக் சொல்வது முதல், ‘கடந்த 6 ஆண்டுகளாக எங்கள் நிறுவனக் காசோலைகளில் தலைமை அலுவலர்கள்தான் கையெழுத்திடுகின்றனர்’ என்று சுகுணா குழுமத்தின் சௌந்தரராஜன் சொல்வதுவரை பல தகவல்கள் குறிப்பிடவேண்டியவை. ‘கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணனின் தந்தையார் மிக ஆசாரமானவர்’ என்பது போன்ற தகவல்களையும் சில எழுத்துப் பிழைகளையும் தவிர்த்திருக்கலாம். – கா.சு. துரையரசு
—
சேராக்காதலில் சேர வந்தவன், ஆத்மார்த்தி, ஆழி பப்ளிஷர்ஸ், 1ஏ, திலகர் தெரு, பாலாஜி நகர், தண்டலம், அய்யப்பன் தாங்கல், சென்னை – 77, விலை 50 ரூ.
கனவுலகிற்கு இழுத்துச் செல்லும் கதைகள். இந்த நூலில் மொத்தம் பத்து கதைகள் உள்ளன. புனை கதைகள் என்பதால் கிடைத்த சுதந்திரத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிற ஆசிரியர் ஒவ்வொரு கதை வாயிலாகவும் வாசகரை மாய லோகத்திற்குக் கொண்டுசெல்லவே முற்படுகிறார். கண்களின் நடனம் என்ற கதையை அதற்கு அப்பட்டமான எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். நவீன இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு இந்தக் கதை மயக்கத்தையே தோற்றுவிக்கக்கூடும். ஷரீமா என்ற கதை சற்றே வேறுபட்டுத் தோன்றுகிறது. அதில் ‘வாகனத்தின் டூமில் இருந்த பனித்துளி கண்ணீர்த் துளி போலிருந்தது’ என்ற வரிகள் கவிநயம் மிக்கவை. கதையில் கொஞ்சூண்டு பகுதியே வந்திருந்தாலும் கதைநாயகனின் அக்கா சந்திரா ஈர்க்கிறார். அவரே தனிக்கதைக்கான களமாக இருக்கும்போது எதற்கு கதை எங்கெங்கோ சுற்றிவருகிறது என்று தெரியவில்லை. ஷரீமா என்று கதாசிரியர் சொல்லும் மலையாளத் திரைப்படக் கதாபாத்திரம் எளிதில் ஊகிக்கக்கூடியதுதான். சிறுகதைக்கு ஒரு குத்துப்பாட்டுபோல ஷரீமா பயன்படுத்தப்பட்டிருக்கிறார். கடவுள் சிறை என்ற கதைதான் லஞ்சம் எனும் நடப்பு எதார்த்தத்தை கேலி செய்கிறது. அதனாலேயே அது வெகுவாகக் கவர்கிறது. அதேபோல கண்ணாடி புத்தகம் என்ற கதையும் கொஞ்சம் கனவுலகில் சஞ்சரித்து, பின்னர் நயமாக முடிகிறது. சித்தாந்தனின் செல்பேசி கடைசியாக உர்ரென்று அரற்றியது மனதைக் கசக்குகிறது. அந்த அழைப்பு யாமாவினுடையதாக இருக்கலாமோ? சேராக் காதலில் சேர வந்தவன் கதை, மிகை எதார்த்த வகையைச் சேர்ந்தது. இந்தத் தொகுப்பிலேயே இந்தக் கதை எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கும். கறுப்பு வெள்ளை நகரம் கதை சில சுவாரசியமான கற்பனைகளைத் தாண்டி வாசகனுக்கு எதையும் சொல்வதுபோல் தெரியவில்லை. ஒற்றை தேவதை கதை, காலம் பின்னோக்கி நகர்வது குறித்தது. இருந்தாலும் அது பின்னப்பட்ட விதமும் முடிவும் நேர்த்தி. மொத்தத்தில் வாசிப்பனுபவமும் கனவுலக சஞ்சாரமும் வேண்டுவோர்க்கு இக்கதைகள் களிப்பைத் தரும். எல்லாக் கதைகளிலும் மது அருந்துதலும் கலவியும் கட்டாயமாக இடம்பெற்றிருக்கின்றன. ப்ரதி பலன், அதிதி, சுதந்திரி, ப்ரஜை, ஆதி நம்பகம் என்று ஏகப்பட்ட சமஸ்கிருத சொற்கள் நூலெங்கும் உலவுகின்றன. கொஞ்சம் முயன்றிருந்தால் முழு நீள சமஸ்கிருத நூலே கிடைத்திருக்கும். – கா.சு. துரையரசு நன்றி: இந்தியா டுடே 10-10-12