நஞ்சாகும் நீதி
நஞ்சாகும் நீதி, அ. முத்துக்கிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை – 18, விலை ரூ. 120
‘படித்தவன்தான் இன்று உலகின் மிகப்பெரும் ஊழல் பேர்வழியாக விளங்குகிறான். படித்தவன்தான் இந்த நாட்டில் உள்ள வனங்கள் தனக்காகவே வளர்ந்திருப்பதாக நினைக்கிறான். படித்தவன்தான் இன்று மலைச் சிகரங்களில் வழிந்தோடும் ஆறுகளின் நீர் முழுவதும் தான் வாழும் நகரங்கள் நோக்கிப் பாயவேண்டும் என்கிறான். படித்தவன்தான் தனக்கு வேண்டிய அலுமினியத் தாதுக்களின் (பாக்சைட் மலைகள்) மீது, ஏன் பழங்குடிகள் குடியிருக்கிறார்கள் என்று கேட்கிறான். படித்தவன்தான் தன்வீட்டு வாசலில் ஒரு குப்பைத் தொட்டியை வைப்பதற்குத் தடைவிதிக்க நீதிமன்றம் வரை சென்றுவிட்டு, மறுபுறம் அபாயகரமான அணுஉலை வேண்டும் என்று மாரடிக்கிறான். படித்தவன்தான் ஏன் மீன் பிடிப்பவர்கள் கடற்கரையில் வசிக்கிறார்கள், அவர்களுக்குக் கடலுக்குச் செல்ல ஒரு வாசலை அமைத்துக் கொடுக்கச் சொல்கிறான். படித்தவன்தான் தனக்கு ஒரு நீதி என்று தீர்ப்புகளுக்கும் விருதுகளுக்கும்கூட விலையை உருவாக்கினான். இன்றைய நவீன உலகின் நடைமுறையில், அரசுகளை விழுங்கும் எல்லா ஊழல்களுமே படித்தவனின் முழுத் திட்டமிடுதலில்தான் நடைபெறுகின்றன. கார்ப்பரேட்களின் வருகை, ஊழல் மற்றும் லஞ்சத்தை அதிகாரபூர்வமாக மாற்றியது. குடும்பம், சமூகம், கல்வி என சகல தளங்களிலும் இந்தப் படித்தவன்தான் சாமானியர்கள் வாழமுடியாத இடமாக… இந்த உலகை மிகத் துரிதமாக உருமாற்றி வருகிறான்.’ இப்படி யதார்த்தமும் சாட்டையடி எழுத்துக்களுக்குமான சொந்தக்காரர் அ. முத்துக்கிருஷ்ணன். போபால் யூனியன் கார்பைட் ஆலை வெடித்தாலும், கூடங்குளம் அணு உலை அமைத்தாலும், தெலுங்கானாவில் தனி மாநிலக் கோரிக்கைப் போராட்டம் தொடர்ந்தாலும், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி தரப்பட்டாலும் அதுபற்றிய செறிவான கட்டுரையை, விமர்சனத்தை ஊடகங்களில் தெளிவாகத் தெரிவிக்கும் இளைஞராக, இவர் அறிமுகம் ஆகி இருக்கிறார். எட்டு நாடுகளின் வழியே சுமார் 10 ஆயிரம் கி.மீ. தரை வழியாகப் பயணித்து, பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்குச் சென்ற சர்வதேசக் குழுவில் இடம் பெற்றவர். மதுரை மலைகளைக் காப்பாற்றத் துடித்து இயக்கம் கட்டியவர். இத்தகைய அனுபவ அறிவும் பல்துறை ஆற்றலும் இருப்பதால் கடினமான தொழில்நுட்ப விவகாரங்களைக்கூட எளிமையாக இவரால் தமிழில் சொல்ல முடிகிறது. ‘கூடங்குளம் செயல்படத் தொடங்கினால் நமக்கு மின்சாரம் கிடைக்கும்’ என்பதைத் தவிர வேறு விளக்கம் எதுவும் சொல்லத் தெரியாதவர்கள் மத்தியில், அது செயல்படத் தொடங்கினால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை அறிவியல் நுட்பங்களாக முத்துக்கிருஷ்ணன் கொட்டுகிறார். இந்தக் கதிர்வீச்சைவிட ‘உலகமயம் என்பது இந்தியா முழுமையையும் பாதிக்கச் செய்யும் மாபெரும் கதிர்வீச்சு’ என்கிறார். அரசு நிறுவனங்கள் செயல் இழந்து வருவதும், நிலங்கள் மலடாக மாறிவருவதும், விவசாயிகள் தற்கொலை மன்மோகன் ஆட்சியில் அதிகமாவதும் புள்ளி விவரங்களின் மூலமாகப் படிக்கும்போது பதற வைக்கின்றன. பார்வையாளர்களை, வாசகர்களை வெறும் நுகர்வோராகக் கருதாமல் சக சிந்தனையாளனாக மாற்றுகிற கட்டுரைகள். – புத்தகன் நன்றி: ஜூனியர் விகடன் 25.11.12