2012 யுக மாற்றத்தின் வாசல்

2012 யுக மாற்றத்தின் வாசல், மா. கணேசன், பக்.164, புதிய மானுடம் பிரசுரம், 222, அசோக் நகர் – II, காந்திநகர் அஞ்சல், வடக்குத்து, குறிஞ்சிப் பாடி தாலுகா. விலை ரூ. 100

‘டிசம்பர் – 21, 2012 உலகம் அழிந்துவிடும், மாயன்களின் நாள்காட்டி அதோடு முடிந்துவிட்டது,’ இந்தச் செய்தி உலகெங்கும் தற்போது கிண்டலும் கேலியுமாக விவாதிக்கப்பட்டு வருகிறது! ‘யாரும் நம்பத் தயாராக இல்லை, நம்பவும் வேண்டாம் – ஆனால், நம் கண் முன்னே தினம் தினம் நடந்துவரும் நிகழ்வுகளும், நாம் படிக்கும் செய்திகளும், நாம் ஏற்கெனவே அழியத் தொடங்கிவிட்டோம் என்பைதத்தானே பறைசாற்றி வருகிறது’ என்று விஞ்ஞான, தத்துவ, ஆன்மிகரீதியாக அற்புதமாக அலசியிருக்கிறார் இந்நூலாசிரியர் மா. கணேசன். நான், எனது குடும்பம், சம்பாத்தியம், உடை, உணவு, வீடு, கார்… என்பது மட்டும்தான் தற்போது ஒவ்வொரு மனிதனின் சிந்தனையாகவும் தேடலாகவும் இருக்கிறது! இயற்கையும் இறைவனும் மனித இனத்துக்காக மட்டுமே நீர், நிலம், காற்று, காடுகள், மலைகள், மற்ற உயிரினங்கள்… அனைத்தையும் படைத்திருக்கின்றன என்ற நம்பிக்கையிலும் இறுமாப்பிலும் தற்போது அவை அனைத்தையும் மாசுபடுத்தி, அழித்து வருகிறது மனித இனம். மக்கள் தொகைப் பெருக்கம், வெப்பமடைந்து வரும் உலகம், காடுகள் அழிப்பு, தண்ணீர் மற்றும் உணவுத் தட்டுப்பாடு, எரிபொருள் தீர்ந்துபோதல்… விரைவில் இவற்றின் தேவைகளுக்காக வெடிக்கப் போகும் மோதல்கள், அணு ஆயுதப்போர்… என்று மனிதனே உருவாக்கிக் கொண்டுள்ள பிரச்சனைகள் யாவும் ஒன்று சேர்ந்து மிக விரைவில் உச்சமடையும் பேராபத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது இப்புத்தகத்தைப் படிக்க தேவையான நேரத்தை ஒதுக்குபவர்களுக்கு நன்றாக புரிய வரும். இப்போதாவது விழித்துக்கொண்டால், 2012-யுக மாற்றத்தின் வாசலாக அது இருக்கும் என்ற நம்பிக்கையோடு எச்சரிக்கிறது இந்நூல்.  

  காந்திஜியின் ஹிந்த் ஸ்வராஜ் – காந்தியக் கட்டுரைகள், லா.சு. ரங்சுராஜன், பக்.208, மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் – 1. விலை ரூ. 90 மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் 1909-இல் ஒரு கப்பற் பயணத்தின்போது தனது தாய்மொழியான குஜராத்தியில் எழுதிய “ஹிந்த் ஸ்வராஜ் அல்லது இந்திய தன்னாட்சி” என்ற இந்த நூலே அவருடைய முதல் புத்தகமாகும். சத்தியம், அகிம்சை, சத்தியாக்கி ரகம் என்ற மூன்று நெறிகளை அறிவித்து அதைக் கடைப்பிடித்தும் வாழ்ந்த அவருடைய இந்த நூல் மிகவும் கடுமையான சர்ச்சைக்கு உள்ளானது. காந்திஜியைப் பிற்போக்காளர் என்றே பலர் முத்திரை குத்தினர். சுதந்திரம் என்ற லட்சியத்தை அடைய எந்த வழியை வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம் என்பதை காந்திஜி ஏற்கவில்லை. தனிமனிதன் சத்தியத்தையும் நேர்மையையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடித்தால் நாடு முன்னேறிவிடும் என்ற அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை உண்மை அல்லவா? மெய்ஞ்ஞானம் சித்திக்க ஒரு ஆன்மிக குரு வேண்டும் என்று காந்திஜி தேடியதையும் திருவண்ணாமலைக்குச் சென்றும் ஸ்ரீ ரமண மகரிஷியைச் சந்திக்க முடியாமல் போனதையும் அதே வேளையில் ரமணரிடம் அவருக்கிருந்த மதிப்பையும் வெகு நன்றாகச் சித்திரிக்கிறார் லா.சு.ர. கோயில்களின் மகத்துவத்தைப் போற்றிய காந்திஜி, திருவிதாங்கூர் மகாராஜா தமது சமஸ்தானத்தில உள்ள அனைத்துக் கோயில்களையும் அரிஜனங்கள் வழிபடத் திறந்து வைக்க வேண்டும் என்று 1936 நவம்பர் 12-ல் உத்தரவிட்டதை ‘அற்புத நிகழ்வு’ என்றும் ‘ஹிந்து சமயத்தைத் தூய்மைப்படுத்தும் பணியின் தொடக்கம்’ என்றும் பாராட்டியிருப்பது நெகிழ்ச்சியுற வைக்கிறது. காந்திஜியைப் பின்பற்றுகிறவர்களும் நினைவுகூர்கிறவர்களும் அருகிவரும் இக்காலத்தில், அவரை விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது காலத்தின் வினோதம். இந்த நிலையில் காந்திஜியைப் பற்றிய தவறான எண்ணங்களைப் போக்கிக்கொள்ள இந்த நூல் உதவும். நன்றி: தினமணி 03-12-12      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *