அவர்தான் கலைவாணர்
அவர்தான் கலைவாணர், சோழ. நாகராஜன், தழல் பதிப்பகம், 25, பாண்டியன் நகர் 3-வது தெரு. கரிசல் குளம், மதுரை – 18. விலை ரூ. 50
கலையில் கஷ்டமானது, சிரிக்க வைப்பது என்பார்கள். அதைவிடக் கஷ்டமானது சிரிப்போடு சிந்திக்கவும் வைப்பது. இரண்டையும் ஒருசேரச் செய்து காட்டிய கலைஞன், என்.எஸ். கிருஷ்ணன். கலைக்காக மட்டுமல்ல அவரது கொடைக்காகவும் இன்று வரை நினைக்கப்படுகிறார். ‘எப்போது ஒருவன் லாப நஷ்டத்தைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பிக்கிறானோ, அப்போதே அவனிடம் இருக்கும் கலைத்திறமை போய்விடும்’ என்று சொன்ன மகத்தான மனிதனின் சுருக்கமான வரலாறு இந்தப் புத்தகம். ’50 வயதைக்கூட எட்டிப்பிடிக்காத வாழ்க்கைதான் அவருடையது, ஆனாலும் இன்றுவரை அறிந்து கொள்ளவும் கற்றொழுகவும், பாடம் பெறவும், வியந்து மகிழவும் அவரது வாழ்க்கையில் குறை வைக்கவே இல்லை. தனது வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அவர் அர்த்தபூர்வமாக ருசித்து அனுபவித்துத்தான் நகர்த்தி இருக்கிறார்’ என்கிற சோழ.நாகராஜன், கலைவாணரின் கலைத் திறமையையும் கொடை வளமையையும் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் மூலமாக தொகுத்திருக்கிறார். நகைச்சுவை நடிகருக்கு ‘தனி டிராக்’ வைக்க ஆரம்பித்தால் அவர் வளர்ந்துவிட்டார், மார்க்கெட்டை பிடித்து விட்டார் என்று அர்த்தம். ஆனால், என்.எஸ். கிருஷ்ணன் தன்னுடைய முதல் படத்திலேயே ‘தனி டிராக்’ வாங்கி நடித்தவர். மதுரத்திடம் அவர் அறிமுகம் ஆனதும் அவர் மீது காதல் வயப்பட்டதும் இன்று படித்தாலும் சினிமாவை விஞ்சும். ‘அவனைப் பாத்தா மலையாளத்தான் மாதிரி தெரியுது. மதுரத்துக்கு மருந்து மாயம் வெச்சிடப்போறான்’ என்று அவரது வீட்டினர் பயமுறுத்தி இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றித்தான் மதுரத்தை அழைத்துக்கொண்டு பூனா செல்கிறார். அங்கு திருமணம் நடக்கிறது, அதற்குப் பிறகுதான், என்.எஸ்.கே.வுக்கு ஏற்கெனவே ஒரு திருமணம் ஆன விஷயம் மதுரத்துக்குத் தெரிகிறது. ‘ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணம் செய் என்றுதானே முன்னோர்கள் சொல்வார்கள். நான் ஒரு பொய்யைத்தானே சொன்னேன்’ என்று சொல்லி மதுரத்தின் கோபத்தைத் தணித்து இருக்கிறார். வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இவரது கணக்குகள் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பல இடங்களில் தர்மம், தர்மம் என்று என்.எஸ்.கே. எழுதி வைத்திருந்தார். அதை அதிகாரிகளால் நம்ப முடியவில்லை. ஒரு நாள் வருமான வரித்துறை அதிகாரி ஹனுமந்தராவ் என்பவர், மாறுவேடத்தில் கலைவாணரைச் சந்தித்து, தன்னுடைய மகளுடைய திருமணத்துக்காகப் பணம் கேட்டார். ‘கொஞ்ச நேரம் பொறுங்கள். என்னுடைய உதவியாளர் வந்ததும் தரச்சொல்கிறேன்’ என்று உட்கார வைத்தாராம். அதற்கு மேல் நடிக்கத் தெரியாத ஹனுமந்தராவ், ‘உனக்கு யாரப்பா கிருஷ்ணன் என்று பெயர் வைத்தது? கர்ணன் என்றுதான் பெயர் வைத்திருக்கணும்’ என்று வாழ்த்தினராம். அவர் திடீரென கொலை வழக்கில் கைதானார். அப்போது மதுரத்தை அழைத்து, ‘படத்தில் நடிக்க முன் பணம் யார் கொடுத்திருந்தாலும், அதைத் திருப்பிக் கொடுத்துவிடு’ என்று சொல்லிவிட்டுத்தான் சிறைக்குப் போனார். அப்படிப்பட்டவரைப் பார்க்க பல சினிமாக்காரர்கள் வரவே இல்லை. சிரிக்க வைத்த கலைவாணரின் வாழ்க்கை வருத்தங்கள் நிரம்பியது. அவரே சொன்னார், ‘கஷ்டம் இருக்கிற இடத்துலதான் கலை இருக்கும்.’ – புத்தகன் நன்றி: ஜூனியர் விகடன் 12.12.12