முல்லை பெரியாறு – வைகை அணைக்கட்டுகளின் பசுமை வரலாறு
முல்லை பெரியாறு – வைகை அணைக்கட்டுகளின் பசுமை வரலாறு, எஸ். வர்க்கீஸ் ஜெயராஜ், பக். 150, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை – 14. விலை ரூ. 150
முல்லை பெரியாறு அணை கட்டப்பட்ட வரலாறும், அதற்கடுத்து பல ஆண்டுகள் கழித்து வைகை அணை கட்டப்பட்டதன் வரலாறும் மிகச் சுருக்கமாக அழகாக விளக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் பின் இணைப்பில் உள்ள குறிப்புதவி நூல்கள் மற்றும் அரசு ஆணைகள், பத்திரிகைக் குறிப்புகள் ஆகியன இந்த நூலின் புள்ளிவிவரங்கள் ஓர் ஆவணம் என்பதை மெய்ப்பிக்கின்றன. பெரியாறு அணையில் பென்னிகுக்கின் தியாகம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இந்தப் பணியில் ஆங்கிலேய அதிகாரிகள் பலர் இறந்துள்ளனர். பஞ்சம் பிழைப்பதற்காக இந்த சதுப்புநிலக் காட்டுக்குள் வந்து 6 அணா (38 காசுகள்) தினக்கூலிக்காக வேலை செய்த சுமார் 5000 தொழிலாளர்களின் துன்பம் நாம் அறியாதது. மலேரியா, காலராநோய்க்கு ஆளாகியும், மிருகங்களால் தாக்கப்பட்டும் இறந்தவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர். அணைப் பகுதியில் 483 தொழிலாளர்கள் புதைக்கப்பட்டதற்கு ஆவணம் உள்ளது. தேக்கடி சுரங்கம் அமைக்கும் பணியில் டைனமைடு வெடித்து இறந்தவர்கள் பலர். இந்த அணையை ரத்தத்தாலும் சதையாலும் கட்டினார்கள் என்று சொன்னால் அது மிகை அல்ல.
—
தெய்வத் திருமூவர் – வாழ்க்கையும், செய்தியும், சுவாமி பஜனானந்தர், பக். 178, ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை – 4. விலை ரூ. 50
தெய்வத் திருமூவராக விளங்கும் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் புனித வாழ்க்கை மற்றும் அவர்களின் ஆன்மிகச் சாதனைகளை சுருக்கமாகக் கூறும் நூல் இது. தெய்வத் திருமூவரும் அவரது சீடர்களும் உலகிற்கு குறிப்பாக இந்தியாவுக்கு ஆற்றிய அரும்பணிகளை இந்நூலின் அறிந்து கொள்ளலாம். ஆன்மிக வாழ்க்கைக்காக உலக வாழ்க்கையையும் அதன் உறவுகளையும் விடவேண்டியதில்லை. மனைவி, கணவன், தந்தை, தாய், சகோதரன், சகோதரி என்று அனைவரும் ஒன்றேயான இறைவனின் பிள்ளைகள் என்ற நிலையில் அவர்களை நேசிக்க வேண்டும் என்று மனித உறவுகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அடிப்படையாக வைத்தார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். ஸ்ரீராமகிருஷ்ண மடங்களில் செய்யப்படுகின்ற சேவை வெறும் ஒரு சமூக சேவை அல்ல. அது ஓர் இறைவழிபாடு. ஸ்ரீராமகிருஷ்ண மிஷனில் ஜாதி, மதம், இன, நாடு பேதமின்றி யார் வேண்டுமானாலும் துறவியாகச் சேர முடியும். இவை போன்ற மேலும் பல அரிய ஆன்மிக முத்துக்கள் இச்சிறிய நூலிலேயே விரவிக் கிடப்பதுதான் இந்நூலின் தனிச்சிறப்பு. நன்றி: தினமணி 03-12-12