விகடன் இயர்புக் 2013
விகடன் இயர்புக் 2013, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 2. விலை ரூ. 125
இது போட்டிகள் நிறைந்த உலகம். இதில் கல்வியும் அறிவும் ஒரு சேரப் பெற்ற மனிதனே வெற்றிபெற முடியும். கல்வியையும் பட்டங்களையும் கொடுக்கும் கல்லூரிகள், அறிவைக் கொடுக்கிறதா என்பது கேள்விக்குறி. இந்த நிலையில், அறிவு ஆயுதத்தை விகடன் பிரசுரம் தயாரித்துள்ளது; ஆண்டுதோறும் தயாரிக்கவும் உள்ளது. ‘புறத்தை அறிந்துகொள்ளப் பயன்படுவது தகவல். தன் அகத்தை ஆராய்ந்து தெளிவதற்கு முற்படுவது அறிவு. வாழ்வின் இருப்பை விளங்கிக்கொள்ள வழிவகுப்பது ஞானம்’ என்று, இந்தப் புத்தகத்தின் முதல் கட்டுரையை எழுதியுள்ள தமிழருவி மணியன் சொல்கிறார். தகவல், அறிவு, ஞானம் ஆகிய மூன்றின் சேர்க்கையாகவே இந்த இயர்புக் உருவாக்கப்பட்டுள்ளது. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இறையன்பு ஐ.ஏ.எஸ்., சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் சங்கர் ஆகியோர் வாழ்வியல் நெறியையும் கல்வியியல் திறமையையும் உணர்த்தும் கட்டுரைகளை எழுதி உள்ளனர். கடந்த ஆண்டின் மறக்க முடியாத நிகழ்வுகள், மனிதர்கள், நாள்வாரியாக சம்பவங்கள் கோக்கப்பட்டுள்ளன. அறிவியல் வளர்ச்சியும் விளையாட்டுப் போட்டிகளும் தனித்தனியாகப் பிரித்துத் தரப்பட்டுள்ளன. இது, கணித மேதை ராமானுஜத்தின் நூற்றாண்டு. அவரைப் பற்றிய பிரத்யேகக் கட்டுரையும் இருக்கிறது. அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கான அடித்தளமும், வினாடி வினாப் போட்டிகளில் பங்கேற்கத் தேவையான தகவல்களும் இதில் ஏராளம். பொதுவாக, இது போன்ற களஞ்சியங்களில் ஆன்மிகச் செய்திகள் இருக்காது. ஆனால் இதில், அவையும் சேர்க்கப்பட்டுள்ளன. எதிர்காலவியல் என்பது இதில் குறிப்பிடத்தகுந்த ஒரு பகுதி. 2030-ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம், இலக்கியம், உணவுக் கலாசாரம், தொழில்நுட்பம் போன்றவை எப்படி அமைந்திருக்கும் என்பது குறித்து பேராசிரியர் நாகநாதன், எழுத்தாளர் சாரு நிவேதிதா, ஆய்வாளர் செந்தில்பாபு, தலைசிறந்த சிறுகதையாளர் அ.முத்துலிங்கம் போன்றோர் எழுதியுள்ளது, படிப்பவர் சிந்தனையை அகலப்படுத்தும். தகவல் அஸ்திரத்தை அளிப்பதோடு அதைச் செவ்வனே எய்யக்கூடிய வழிமுறைகளையும் சேர்த்தே தருகின்றன பல கட்டுரைகள். லட்சியப் பதவிகளை அடைவதற்கான தேர்வுகளுக்கு இளைய சமுதாயம் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் பக்குவத்தை விரல் பிடித்து வழிநடத்தும் கட்டுரைகள் அவை. விகடன் வழங்கி இருக்கும் இயர் புக், 2013-ல் உயர் புக்! – புத்தகன் நன்றி: ஜூனியர் விகடன் 02-01-13