உயிர்ச்சொல்
உயிர்ச்சொல், கபிலன் வைரமுத்து, பக்கம் 200, கிழக்கு பதிப்பகம், சென்னை – 14. விலை ரூ. 150 To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-207-2.html
நீண்ட நாட்களாக குழந்தையில்லாமல் ஏங்கித் தவித்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் மன உளைச்சல்களையும் அதிலிருந்து அவள் மீண்டதையும் உணர்வுபூர்வமாகச் சொல்லும் நாவல். அவளுடைய கணவன் ஊடகத்துறையில் செயல்படக்கூடியவன், அவனுடைய நண்பர்கள் நாட்டின் ஊழல் அரசியலை முடிவுக்குக் கொண்டுவர முயல்கிறார்கள். இணையதளங்கள் மூலமாகவும், கண்காட்சிகள் மூலமாகவும் மக்கள் விழிப்புணர்வு பெற வைக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் எழுச்சியின் மூலம் ஊழலற்ற ஆட்சியை அமைக்க முடிகிறது. அதிலும் சில குறைபாடுகள் தோன்றுகின்றன. கற்பனையேயானாலும் நாவலாசிரியரின் சமூக அக்கறையைப் புரிந்துகொள்ள முடிகிறது. குடும்பம், சமூகம் ஆகிய இரண்டு தளங்களில் நாவல் பயணம் செய்கிறது. குடும்பத்தில் கணவன், மனைவி உறவு, அவர்களுக்கிடையிலான அன்புமிக்க நெருக்கம், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வது மிக இயல்பாகவும், அழகாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. நாவலின் மொழிநடையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். உரைநடையா- கவிதையா? என்று பல சமயங்களில் வாசகர்களைத் திகைக்க வைக்கும் மொழிநடை. அதேசமயம் நாவலுக்குள் வாசகர் அமிழ்ந்து போவதற்கு தடையில்லாமல் அந்தக் கவிதை மொழி அமைந்திருப்பது சிறப்பு.
—
கடவுளைக் காட்டிய கவிகள், மு. ஸ்ரீநிவாஸன், பக்கம் 240, திருக்குறள் பதிப்பகம், சென்னை – 78. விலை ரூ. 150
கேரளத்தின் எழுத்தச்சன், ஸ்ரீநாராயண குரு, கர்நாடகத்தின் சர்வக்ஞர், கனகதாசர், புரந்தரதாசர், மகாராஷ்டிராவின் பக்த ஜனாபால், பஞ்சாபின் அர்ஜுன் தேவ், தமிழகத்தின் ஆளவந்தார் உட்பட 32 பக்திக் கவிஞர்களின் முக்கியத்துவம், தனித்தன்மை, பக்தியினூடாக அவர்கள் பரப்பிய சமுதாயச் சிந்தனைகள் போன்ற அனைத்தையும் பற்றிய அற்புதமான செய்திகளைப் பரிமாறும் நூல். பல்வேறு மொழிக் கவிஞர்களின் குறிப்பிடத்தக்க கவிதைகளை மேற்கோளாக இனிய தமிழில் தந்திருக்கிறார் நூலாசிரியர். இந்தக் கவிஞர்கள் வாழ்ந்த சமூகச் சூழ்நிலை வரலாறு, கவிஞர்களின் வாழ்க்கைச் செய்திகள் அனைத்தையும் சுவையாகவும், எளிமையாகவும் கூறப்பட்டிருப்பது நூலின் சிறப்பு.
—
வஞ்சி ‘ஆர்’ கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு, பதிப்பாசிரியர்: ஆ.பால. தண்டாயுதபாணி, கு. சீனிவாசன், பக்கம் 448, ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம், சென்னை – 29. விலை ரூ. 300
‘ஆர்’ அமைப்பு நடத்திய கருத்தரங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழின் சங்க இலக்கியம், நீதி இலக்கியம், சமய இலக்கியங்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், பண்பாடு, கலைகள் உட்பட பல்வேறு பொருட்களைப் பற்றிய அறிஞர்களின் கட்டுரைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. சமகால இலக்கியங்களைப் பற்றிய ஆய்வும் உண்டு. ‘பெண்ணிய நோக்கில் அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்று அம்பையின் சிறுகதையைப் பற்றிய ஆய்வும் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தின் வரலாறு, பண்பாடு, இயற்கை வளம், இலக்கியம் எனப் பரந்த தளத்தில் இந்நூலின் கட்டுரைகள் பல்வேறு அரிய செய்திகளை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினமணி 23-01-12