பாஷாவும் நானும்
பாஷாவும் நானும், வெளியிட்டோர்: வெஸ்ட்லேண்ட், வெங்கட் டவர், 165, பூந்தமல்லி ஐரோடு, மதுரவாயல், சென்னை – 95. விலை ரூ. 125
ரஜினிகாந்த்தின் திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல்கல் “பாட்ஷா.” அவர் ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, வசூல் சக்ரவர்த்தி என்று எடுத்துக்காட்டிய படம். ரஜினி நடித்த பாட்ஷா, அண்ணாமலை, வீரா ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர் சுரேஷ்கிருஷ்ணா. பாட்ஷா படமாகும்போது நடந்த சுவையான சம்பவங்கள், படப்பிடிப்பில் ரஜினி காட்டிய ஆர்வம், படத்தில் செய்யப்பட்ட மாறுதல்கள்… இவைகளை எல்லாம் கதைபோல் எழுதியிருக்கிறார்கள், சுரேஷ் கிருஷ்ணாவும் மாலதி ரங்கராஜனும். ரஜினி ரசிகர்களை மட்டும் அல்ல, எல்லோரையும் காந்தம் போல கவரக்கூடிய புத்தகம்.
—
இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி?, குருபிரியா, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 2. விலை ரூ. 65 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-0.html
இதுவரை 48 நாடுகள் கடலில் மூழ்கிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தைக் கொண்ட இமயமலை, ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்தது! கடந்த 17,000 ஆண்டுகளில், கடல் மட்டம் 125 மீட்டர் உயர்ந்துள்ளது! இதற்கெல்லாம் பூகம்பம், சுனாமி முதலான இயற்கைச் சீற்றங்கள்தான் காரணம். இயற்கைச் சீற்றங்கள் பற்றி பல அதிசயமான தகவல்களைக் கூறும் ஆசிரியர் குருபிரியா, இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி என்பதையும் விளக்குகிறார்.
—
இலட்சியத் தந்தை, தணல் பதிப்பகம், 39-13, ஷேக்தாவூத் தெரு, ராயப்பேட்டை, சென்னை – 14, விலை ரூ. 100
தி.மு.கழக வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டவர் அதன் அமைப்புச் செயலாளர் என்.வி. நடராசன். “உத்தமத்தோழர்; நான் வணங்கும் தியாகச் செம்மல்” என்று இவருக்குக் கலைஞர் கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார். என்.வி. நடராசனின் மகனும், மத்திய அமைச்சராக இருந்தபோது ‘ஹெலிகாப்டர்’ விமான விபத்தில் மறைந்தவருமான என்.வி.என். சோமு, தன் தந்தையார் பற்றி அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். கட்டுரைகள் உள்ளத்தைத் தொடுகின்றன. கட்டுரைகளை சிறந்த முறையில் தொகுத்துள்ள டாக்டர் என்.எஸ். கனிமொழி (என்.வி.என். சோமுவின் மகள்) பாராட்டுக்கு உரியவர்.
—
பொக்கிஷம் – 2, சு. ஷாஜஹான், 13, 14, ஆர்.எம்.வி. டவர்ஸ், தெற்கு உக்கடம், கோவை – 641001. விலை ரூ. 200
தாழ்ந்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்றுவதற்கு “ரசவாதம்” என்று பெயர். இதுபற்றி, சித்தர்கள் பாடல்களாக எழுதியுள்ளனர். அவற்றை அடிப்படையாக வைத்து, இந்த நூலை எழுதியுள்ளார் சு. ஷாஜஹான்.
—
காரைக்கால் அம்மையார், சு. கோதண்டராமன், வசந்தா பிரசுரம், 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33. விலை ரூ. 65
காரைக்கால் அம்மையாரைப் பற்றியும், அவர் வளர்த்த சைவ முறை வழிபாட்டு முறை, இயற்றிய காப்பியங்கள் பற்றியும் கூறும் நூல்.
—
மலரும் நினைவுகளில் மக்கள் தலைவர், கே. இளந்தீபன், கவிதா வெளியீடு, 8/55, மேற்கு சாலைத்தெரு, சுந்தரப்பெருமாள் கோவில், கும்பகோணம் – 614208. விலை ரூ. 100
ஜி.கே. மூப்பனார் பற்றி நாளிதழ்களில் வெளிவந்த முக்கிய கட்டுரைகள், மற்ற தலைவர்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன.
—
புகைப்படத்துறையின் சுவடுகள், தொகுத்தவர்: எஸ்.ஹென்றி, லக்கி பதிப்பகம், அன்னை தெரசா நகர், உடையார்குடி, காட்டுமன்னார்குடி – 608301. விலை ரூ. 30
சாதாரண கேமரா, புகைப்படத்துறை கேமரா, டிஜிட்டல் கேமரா, வெப் கேமரா என பலவகையான கேமராக்களின் தோற்றங்கள், பல வகை கேமராக்களின் படங்கள், புகைப்பட கலைஞர்களின் படங்கள், அவற்றைப் பற்றிய தகவல்கள் அடங்கிய நூல். அரிய புகைப்படங்களில் மூன்று முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் படம் ரசிக்கத்தக்கது. நன்றி: தினத்தந்தி 19-12-12