வாலிப வாலி
வாலிப வாலி, நெல்லை ஜெயந்தா, பக். 372, வாலி பதிப்பகம், 12/28, சௌந்தர்ராஜன் தெரு, தி.நகர், சென்னை – 17, விலை ரூ. 250
82 வாரங்களாக சென்னை பொதிகை தொலைக்காட்சியில் கவிஞர் வாலியுடன் நிகழ்த்திய நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். தமிழ் சினிமாவின் வரலாற்றினை வாலியின் மனப்பெட்டகத்தில் இருந்து அள்ளி எடுத்துத் தந்திருக்கிறார்கள். திரை உலகின் ஒவ்வொரு அங்குலத்தையும் வாலியின் வாக்கு அளந்து வைக்கிறது. நம் கண்முன் நான்கு தலைமுறையைத் தாண்டியும் அவரது திரைத்தமிழ் வெள்ளமாய் ஓடிவருவதை ஒவ்வொரு நேர்காணலின்போதும் ரசிக்க முடிகிறது. நான் ஏன் பிறந்தேன்? தொடங்கி இன்றுபோல் என்றும் வாழ்க என்று வாழ்த்தும் ஒரு காவியக் கவிஞரின் கவிமனம் நூல் முழுதும் பதிவாகியுள்ளது. ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்று எம்.ஜி.ஆருக்கு எழுதிய வாலிக்கும் மூன்றெழுத்தில்தான் மூச்சிருக்கிறது. அது – பாட்டு’ என்று பழநிபாரதி சொல்வது ‘வாலிப வாலி’யின் பாட்டுக்கடலின் ஆழம்.
—
சொல்லப்பட வேண்டியவை, பேராசிரியர் கே. நவநீதன், பக். 144, பத்மா புக்ஸ், 17 ஜனனி ஃப்ளாட்ஸ், 313, மாணிக்கம் அவென்யூ, T.T.K.ரோடு, சென்னை – 18. விலை ரூ. 100
மனம் என்பது என்ன? அது எவ்வாறு எண்ணங்களை உருவாக்குகிறது? நாம் எல்லோரும் சூப்பர் ஸ்டார்களா? வாழ்வின் பொருள் என்பது என்ன? ஏன் இந்த டென்ஷன்? இயற்கை நமக்கு இரக்கம் காட்டாதா? ஐன்ஸ்டீனை ஏன் இருபதாம் நூற்றாண்டின் மாமனிதராக தேர்ந்தெடுத்தோம்! இவை போன்ற மனதின் எண்ணங்களை சற்று விரிவாகப் பேசும் நூல் இது. அத்தனையையும் மக்களோடு பின்னிப் பிணைந்து நடக்கிற நிகழ்வுகளோடு எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர்.
—
ஈழத்தமிழர் பிரச்னை: சில குறிப்புகள், வெளியீடு: Podhigai Pournai Karsal, Chennai – 41.
இலங்கை தீவுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு 2650 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. சங்ககாலம், இடைக்காலம், ஐரோப்பியர் வருகைக்கும் பின்னர் தமிழீழத்தின் நிலை ஆகியவற்றை விவரித்து தமிழீழப் போராட்ட வரலாற்றினை தெளிவுபட விளக்கியுள்ளார். சிங்களர்களின் வெறுக்கத்தக்க குணங்களை, அவர்கள் தமிழர்களுக்கு எதிராக, இஸ்லாமியருக்கு எதிராக செயல்பட்ட நிகழ்வுகள் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழர் பற்றிய ஒரு பட்டறிவினை நூலைப் படிக்கும் யாவரும் உணர்ந்துகொள்வர்.
—
ப்ரியா கல்யாணராமன் சிறுகதைகள், பக். 176, குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 10, விலை ரூ. 120 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-478-1.html
இருபது வயதில் ப்ரியா கல்யாணராமன் குமுதத்தில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. வாழ்க்கை ஓட்டத்தில் சின்னஞ்சிறுசுகளின் உள்மன உலகை பல கதைகளில் காட்சிப்படுத்தியிருக்கிறார். பிள்ளையாருக்கு சேவை செய்யும் வேம்புவின் மனசு, தப்புக்கு தானே தண்டனை கொடுத்துக் கொள்ளும் மணிகண்டனின் மனசு, திருடறவங்ககிட்டே இருந்து திருடி இல்லாதவர்களுக்குக் கொடுப்பதில் தப்பில்லை என்ற செந்திலின் மனசு என்று ஜாக்கிரதையாக அடியெடுத்து வைத்திருக்கிறார். ‘பஞ்சு மனசு’ என்ற சிறுகதை பெற்றோரையும் உடன்பிறந்தாரையும் அலட்சியப்படுத்தும் பிள்ளைகளை விலக்கி வைக்கச் சொல்லும் காரணங்கள் படிப்போர் மனதை பஞ்சாக்கிக் காட்டுகிறது. ‘இலக்கிய சிந்தனை’ விருது பெற்ற சிறுகதை இது. வறுமையின் பிடியில் தற்கொலைக்குத் தயாரான தன் குடும்பத்தைக் காப்பாற்றிய பூனையை தெய்வமாக்கிப் பார்க்கும் மனசு ப்ரியா கல்யாணராமனுக்கு வாய்க்கப்பட்டிருக்கிறது. இன்னும் மஹா, திவ்யா, வேணி, பாபு என்று நிஜமனிதர்களின் இயக்கம், உங்களையும் அவர்களோடு பொருத்திப் பார்க்க வைக்கும். அது ஆசிரியரின் வெற்றி. – இரா.மணிகண்டன் நன்றி: குமுதம் 26-12-12