ஜெயம் மகாபாரதம் ஒரு மறுபார்வை
ஜெயம் மகாபாரதம் ஒரு மறுபார்வை, தேவ்தத் பட்நாயக், தமிழில்-சாருகேசி. விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, பக்கம் 496, விலை 160 ரூ. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-810-6.html
பெண் ஆசையின் விளைவு ராமாயணம் என்றால், மண் ஆசையின் விளைவு மகாபாரதம் என்பர். இவை இரண்டும் இந்தியாவின் இரு இதிகாசங்களாகப் போற்றப்படுகின்றன. JAYA AN ILLUSTRATED RETELLING OF MAHABHARATA என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில், வழக்கமான மகாபாரதக் கதையுடன், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வாய் வழியாக உலவும், மகாபாரதக் கதை நிகழ்வுகளையும் இந்தியாவில் பல மாநிலங்களில் மாறுபட்டுக் கூறப்படும் நிகழ்வுகளையும், பல கிளைக்கதைகளையும் இணைத்து ஆசிரியர் தந்திருப்பது படிக்கச் சுவையாக உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஆசிரியர் நமக்கத் தெரியாத பல செய்திகளைக் கட்டம் கட்டிக்கூறுவது, நூலிற்கும் புதுமை சேர்க்கிறது. எடுத்துக்காட்டாக பஞ்சாபி கிராமக் கதையாக, திரவுபதி நாய்களுக்கு இட்ட சாபத்தையும் (பக் 179) இலங்கை அரசன் விபீஷணன், தர்மரை வணங்க மறுத்ததும், பின்னர் கிருஷ்ணர் தருமரை வணங்கியதும், மனம்மாறி வணங்கினாள் என்பதையும் (பக் 200) கூறலாம். அனைவரும் படிக்க வேண்டிய அருமையான நூல். – டாக்டர் கலியன் சம்பத்து.
—
ஒழிவில் ஒடுக்கம், உரை திருபபோரூர் சிதம்பர சுவாமிகள், பொழிப்புரை புலவர் வீ.சிவஞானம், குமரதேவர் பதிப்பகம், போரூராதீனம், போரூர் – கோவை 10, பக்கம் 176, விலை 90 ரூ.
காழிக் கண்ணுடைய வள்ளல் அருளிய ஒழிவில் ஒடுக்கம் என்ற நூலுக்கு திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் உரை எழுதி, பொழிப்புரைத் தழுவல் புலவர் வீ. சிவஞானம் தந்துள்ளார். இறை, உயிர், தளை என்னும் முப்பொருள் உண்மை குறித்து பேசும் நூல்களுக்கு ஒரு விதை போன்றது விளங்குவது இந்நூல். 36 தத்துவங்களைக் கடந்த ஆன்மா, தன் அறிவு (தற்போதம்) ஒழிந்த இடத்து, சிவத்தில் ஒடுங்கும் என்னும் கருத்தை உள்ளடக்கியதால் இந்நூலுக்கு ‘ஒழிவில் ஒடுக்கம்’ எனப் பெயராயிற்று. பத்து அதிகாரங்கள் 253 நேரிசை வெண்பாக்கள் உடையதாய் விளங்குகிறது இந்நூல். வடலூர் வள்ளல் பெருமான் இந்நூலை உரையுடன் கண்ணுற்று சிறப்புப் பாயிரத்திற்கு அரிய விருத்தியுரை எழுதி 1881ம் ஆண்டு தாமே பதிப்பாசிரியராக இருந்து முதன்முதலில் அச்சில் கொண்டு வந்தார்கள். அருளாளர்கள் பலரும் இந்நூலினைக் காலங்காலமாய் ஓதி வந்துள்ளமையால், ஒவ்வொருவரும் வாங்கி படித்து பயன்பெற வேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடு, திருப்பூர் பத்மநாபன் பொருளுதவியால் ரூ. 50க்கும் அளிக்கப்படுவதாக புத்தகத்திலேயே அச்சேற்றியது மற்றொரு அம்சமாகும். – குமரய்யா. நன்றி : தினமலர் 23, அக்டோபர் 2012.