தமிழ் சினிமாவின் மயக்கம்
தமிழ் சினிமாவின் மயக்கம், கௌதம சித்தார்த்தன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக்கங்கள் 184, விலை 125ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-810-4.html ஒரு சினிமாவின் நீள அகலங்களை அதன் போக்கில் சொல்லிவிட்டு, பிடித்திருந்தால் ஆஹா, ஓஹோ என்றும் பிடிக்காவிட்டால் மொக்கை என்று எழுதுவது ரசனையின் பாற்பட்டது. அதை விமர்சனம் என்று தளத்தில் இயங்க விட்டுப்பார்க்கும் போக்கு, தமிழ் இதழ்களில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதைத்தாண்டி ரசனை விமர்சனப் போக்கிலிருந்து விலகி அதனுள் ஒரு நுட்பமான அரசியல் பார்வையைச் செலுத்திப் பார்க்கும் புதிய போக்கு கௌதம சித்தார்த்தனின் எழுத்தில் வந்துள்ளது. தீராநதியில் வெளிவந்த சினிமாக்கள் பற்றிய நுண் அரசியல் கட்டுரைகள் இவை. உலகமயமாக்கல் சூழலில் எவ்வளவு நுட்பமாக ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டிய தேவையுள்ளது என்பதை உணர்த்தும் நூல், புதிய விமர்சனப் போக்குக்கான புதிய தடம்.
—-
நாட்டுக்கணக்கு – இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ், சோம. வள்ளியப்பன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2 8/2, போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை, தி. நகர், சென்னை 17, பக்கங்கள் 167, விலை 110ரூ.
To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-3.html
உங்கள் வீட்டின் வரவு செலவு என்ன என்று உங்களுக்குத் தெரியும். நம் நாட்டின் வரவு செலவு கணக்குத் தெரியுமா? அதைத் தெரிந்து என்ன செய்யப்போகிறோம் என்பவர்களுக்கான பதில்தான் சோம. வள்ளியப்பனின் இந்நூல். நாம் கட்டுகிற வரி, நாட்டின் பொது செலவுக்கு யார் எவ்வளவு கொடுக்கிறார்கள்? அதிலிருந்து நாம் எவ்வளவு பெறுகிறோம்? இதையெல்லாம் யார் முடிவு கட்டுகிறார்கள்- இது நம் சந்ததியினருக்கு எந்தவகையில் பயன்படும்? என்பதையெல்லாம் சொல்லி இதுதான் ஒரு நாட்டின் பொருளாதாரம் என்று நமக்கு சொல்லித்தரும் நூல் இது. நம் நாட்டின் நிதி சார்ந்த விஷயங்களை ஒரு பாமரனும் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது. அவ்வளவு எளிமை, அவ்வளவு உதாரணங்கள். எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
—-
கருவேலங்காட்டுக்கதை, ராஜா செல்லமுத்து, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக்கங்கள் 160, விலை 100ரூ.
To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-2.html
கருவேலங்காட்டுக் குருவிகளைப் போல ஊரும் உறவும் போற்ற ஒற்றுமையாய் வாழ்ந்த குடும்பம் ஒரு குடியால் சீரழிவதுதான் கருவேலங்காட்டுக் கதையின் மையக்கரு. நாவலின் பலம் அது தன் வட்டார வழக்கிலேயே பேசப்படுவதுதான். தமிழகத்தின் கடைக்கோடி கிராமமான தேவாரத்தில் கதை நிகழ்கிறது. கருவாயன் ரங்கம்மாள்தான் கதை நாயக நாயகி. தமிழகத்து கிராமங்கள்தோறும் இன்றும் நம் கண்முன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ மனிதர்களைத்தான் நாவல் முழுதும் நடமாடவிட்டிருக்கிறார் ஆசிரியர். கிராமப் பஞ்சாயத்தாகட்டும், கோயில் திருவிழாவாகட்டும் எல்லாமே பச்சக்கென்று நம் மனதிற்குள் வந்து உட்கார்ந்து பிசைகிறது. அண்ணன் குடும்பத்திற்காக தன் வாழ்வை தியாகம் செய்யும் செல்லம் போன்ற பாத்திரங்கள் நம் நெஞ்சை விட்டு அகலாத படைப்பு, குடியால் அன்பு சாம்ராஜ்யம் அடியோடு அழிந்து போவதை உணர்த்தும் நாவல். – இரா. மணிகண்டன். நன்றி: குமுதம் 6, மார்ச் 2013.