சுப்பிரமணியபுரம்

சுப்பிரமணியபுரம் (திரைக்கதையும் உருவான கதையும்), எம். சசிகுமார், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 150ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-812-0.html

தமிழில் பெரும் திருப்புமுனை ஏற்படுத்திய படம் சுப்பிரமணியபுரம். இதன் கதாநாயகனாக நடித்த எம். சசிகுமார், தயாரிப்பாளர், இயக்குனர், கதை, வசனகர்த்தா… என்று பன்முகம் படைத்த திறமைசாலி. ஸ்ரீதர், கே. பாலசந்தர், பாரதிராஜா, சங்கர் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர். திறமைசாலிகளைக் கண்டுபிடித்து, இயக்குனர்களாக அறிமுகம் செய்துவருகிறார்.

கதை வலுவாக இருந்தால் போதும். புதுமுகங்களை வைத்தே, குறைந்த செலவில் சிறந்த படத்தை உருவாக்கலாம் என்ற நம்பிக்கையையும், துணிச்சலையும் இளைஞர்கள் மனதில் பதிய வைத்த படம் சுப்பிரமணியபுரம். அதைப்பின்பற்றித்தான் இன்று உலகத்தரத்தில் ஒரு சில படங்கள் தமிழில் வந்துகொண்டிருக்கின்றன.

சுப்பிரமணியபுரம் உருவான கதையை இப்புத்தகத்தில் சுவைபடச் சொல்லியிருக்கிறார் சசிகுமார். திரைக்கதை முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. திரைப்படத்துறையில் ஈடுபாடு கொண்ட அனைவருக்கும் இப்புத்தகம் நிரந்தரமான சிறந்த வழிகாட்டி. வண்ணப்படங்களுடன் புத்தகம் கண்ணைக் கவருகிறது.

நன்றி: தினத்தந்தி, 20 பிப்ரவரி 2013.

——

விரல் தியான முத்திரைகள், டாக்டர் ஜான் பி. நாயகம், வெளியிட்டோர்-ராம்பிரசாந்த், 106/4, ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 75ரூ.

எந்தெந்த முத்திரைகள் செய்தால் ஞாபகசக்தி வளரும், சுறுசுறுப்பை தரும், படிப்பில் ஆர்வத்தை தரும் என்று படங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது. தியான முத்திரைகள் பயிற்சியின்போது உடலில் எப்படி மாற்றத்தை உண்டாக்குகிறது என்று விஞ்ஞான பூர்வமாக கூறப்பட்டுள்ளது.

——

முதுகைக்காட்டும் முகம், கவிவாணர் ஐ.உலகநாதன், தாமரைப் பதிப்பகம், ஜெ.6, 3வது கிராஸ், எல்.என்.புரம், பெங்களூர் 560021, விலை 100ரூ.

சோர்ந்து படுத்துவிட்டால் படுத்த இடம் சுடுகாடு. பாய்ந்து புறப்படுவோம் பாதையெல்லாம் உன் வீடு என தன்னம்பிக்கை ஊட்டும் பல கவிதைகள் இடம் பெற்றுள்ள இனிய நூல். கவிதைகள் அனைத்தும் தமிழிலும், ஆங்கிலத்திலும் அமைந்துள்ளது புதுமை. இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கவிதைகள் இளைய தலைமுறைக்கு ஈடற்ற நம்பிக்கையை ஊட்டும். முதியவர்களின் மூளைக்கு வேலை கொடுக்கும். மனித வாழ்வாங்கு வாழும் வழிமுறைகள் இங்கு கவிதைகளாக வடிக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 13 பிப்ரவரி 2013.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *