திரையுலகப் பிரபலங்கள் – 1
திரையுலகப் பிரபலங்கள் – 1, ஆசிரியர்: ஏ. எல். எஸ். வீரய்யா, விலை: ரூ 125, வெளியீடு: திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை -17.
சுமார் 50 ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் அனுபவம் பெற்ற இந்நூலாசிரியர், தமிழகத்தில் பல வெற்றிப் படங்களுக்குத் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றியவர். இவர், கவிஞர் கண்ணதாசனின் பாசறையில் உருவானதால், எளிய தமிழ் நடையில் நாடகம் மற்றும் சினிமா துறைகள் குறித்த நூல்களை எழுதும் எழுத்தாளராகவும் பரிணமிக்கிறார். சினிமா துறைக்குப் புதிதாக வருபவர்களுக்கும் மற்றவர்களுக்கும், இத்துறை சார்ந்த பழைய பல்வேறு தகவல்களை இலகுவாக அறிந்து கொள்ள இவரது நூல்கள் உதவுகின்றன. அந்த வகையில் தற்போது முதல் பாகமாக வெளியாகியுள்ள இந்நூலில், 1930 – களில் சினிமா துறையின் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ என்ற ஸ்டூடியோவை சேலத்தில் முதல் முதலில் தொடங்கி, பல வெற்றிப் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் டி.ஆர். சுந்தரம் தொடங்கி, ஜெமினி எஸ். எஸ். வாசன், எல். வி. பிரசாத், பி. நாகி ரெட்டி, ஏ. வி. மெய்யப்பன்… என்று பிரபல தயாரிப்பாளர்கள் முதல், டைரக்டர்கள், இசையமைப்பாளர்கள், கதாநாயகர்கள், கதாநாயகிகள், காமெடியன்கள், வில்லன் நடிகர்கள், பாடலாசிரியரகள், பின்னணிப் பாடகர்கள்… என்று 1980 வரையிலான சுமார் 100 முக்கிய பிரபலங்களைப் பற்றிய அடிப்படை தகவல்கள் இந்நூலில் தொகுக்கப்படுள்ளன. ஒவ்வொருவரைப் பற்றியும் இரண்டு பக்கங்களுள் அவரவர் புகைப்படத்துடன், குணநலன்கள், வரலாற்றுக் குறிப்புகள், சாதனைகள் போன்ற சுருக்கமானத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு தனித் தனியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: துக்ளக் (20.3.2013)