வரப்பெற்றோம்.
வரப்பெற்றோம்
ஞானவியல், சு. தீனதயாளன், கவுதம் பதிப்பகம், 2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை 50, பக்கங்கள் 112, விலை 50ரூ. சீனாவின் தத்துவஞானி, லாவோட்சாவின் த்தா வோத்தூ ஜியாங் என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. தமிழில் எழுதப்பட்டுள்ள இந்த மொழி மாற்ற நூலில் ஆழமான ஆன்மிக தத்துவம் எளிய தமிழில் கவிதை நடையில் உள்ளது. புத்தர், ரமணர், ஜே.கே., ஆகிய ஞானிகளை போற்றி வழிபடும் மொழி பெயர்ப்பாளரின் ஞானவியல் நூல் வரவேற்கப்பட வேண்டியதுதான். இன்டர் நெட்டில் இருந்து 100 கதைகள், ஆர். ராஜாராமன், கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, பக்கங்கள் 184, விலை 80ரூ. ஒவ்வொரு கதையும் ஒரே நிமிடத்தில் படிக்கக் கூடியவை. எல்லாமே மிக சுவையாக இருக்கின்றன. இன்டர்நெட்டில் வந்து குவியும் எத்தனையோ குப்பைகளிலிருந்து அருமையான மணிகள் போன்றவற்றை பொறுக்கி கோர்த்து தந்திருக்கும் ஆசிரியரின் ரசிகத்தன்மை பாராட்டுக்குரியது. -சிவா, ஜோதிடம் புரியாத புதிர், நடிகர் ராஜேஷ், கற்பகம் புத்தகாலயம், தி.நகர், சென்னை 17, விலை 200ரூ. ஜோதிடத்தில் உண்மை உண்டா அதில் கூறப்படும் கிரகபலன்கள் சரிதானா என்பதை தன் அனுபவங்கள் அடிப்படையில் ஆசிரியர் விளக்குகிறார். ஜோதிடம் விரும்புவோர் இதை ஊன்றிப் படிக்க வாய்ப்பு உண்டு. சித்த மருத்துவம் எதற்கு? எப்படி?, டாக்டர் ஏ. ராமலிங்கம், கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை 17, பக்கங்கள் 392, விலை 220ரூ- ஆசிரியர் இம்ப்காப்ஸ் கூட்டுறவு நிறுவனத்தின் தலைவர். சித்த மருத்துவத்தில் எளிதாகக் கிடைக்கும் 60க்கும் மேற்பட்ட மூலிகைகள் பற்றி தெளிவான தகவல்கள், அதன் மருத்துவ பயன்பாடு, அதை மருந்தாகப் பயன்படுத்தும் முறை, அதனால் தீரும் நோய்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். இந்த சித்த மருத்துவ மூலிகைகளின் வண்ணப்படமும், ஆங்கிலப் பெயர் விளக்கமும் தரப்பட்டிருப்பதால், வாசகர்கள் பெரிதும் வரவேற்பர். அறிவுக்களஞ்சியம், சன்மார்க்க மெய்ஞானி சேது சுவாமி, ஜீவ ஒளி மன நிறைவு மார்க்கம், வடலூர், விலை 100ரூ. தன் மனம் கேள்வி கேட்க தன் அறிவே பதிலளிப்பதாக அமைந்தது இந்த நூல். நாடு அமைதி பெற நல்லவர்களும், தியாகிகளும் குடிமக்களும் நாட்டைக் கண்காணித்துக் கொண்டுவர வேண்டும் போன்ற பதில்கள், வள்ளலார் நெறியில் தரப்பட்டுள்ளன. புரந்தரதாசர் (கன்னட மூலம்), ஜி. வரதராஜராவ், தமிழில் இறையடியான், சாகித்ய அகடமி, குண பில்டிங், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக்கங்கள் 64, விலை 40ரூ. கன்னட நாட்டில் வாழ்ந்த திருமாலின் அடியார்களுள் மகுடமாகத் திகழ்ந்தவர் புரந்தரதாசர். புரந்தரதாசர் ஓர் அறிமுகம், ஹரி சேவையின் சாதனை, புரந்தரதாசரின் படைப்புகளின் ஆய்வு, புரந்தரதாசரின் புகழ் என்று நான்கு பகுதிகளில் நூல் அமைந்துள்ளது. – எஸ். திருமலை. பருத்தி நகரம், வழக்கறிஞர் சி.ரவி, விலை 70ரூ. பல்வேறு தலைப்புகளில் கட்டுரை, கவிதைகள் கொண்டது. இயற்கை உணவு மலிவானது என்ற தகவல் கொண்ட கட்டுரையும் இதில் அடக்கம். ரிக் வேத சமூகம் ஒரு பார்வை, சுந்தர சோழன், விலை 200ரூ. மதத்தை பற்றி மார்க்சியம், அ.கா. ஈஸ்வரன், விலை 50ரூ. சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம், அ.கா. ஈஸ்வரன், விலை 60ரூ. மேற்கண்ட நூல்களை செந்தழல் வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது. 52/252, செல்லப்பா தெரு, குயப்பேட்டை, சென்னை 12. உலகம் முழுவதும் மார்க்சிய தத்துவ நடைமுறைகள் மாறி, அதன் தாக்கம் குறைந்து வரும் நிலையில் சென்ற நூற்றாண்டில் பெரிதும் பேசப்பட்ட கருத்துக்களை மையமாக்கி தமிழில் வெளியிடப்பட்ட நூல். நிர்வாக இயல், மன இயல் குறித்த புதிய ஆய்வுகள் இந்திய தத்துவ சிந்தனைகளை புகழும்போது, ரிக் வேத சமூகத்தை குறுகிய கண்ணாடியில் பார்க்கிறது முதல் நூல். காபிடலிசத்தின் முழு பரிமாணத்தில் உலகம் சூழலும் போது, மார்க்சியம் வலியுறுத்திய கருத்துக்கள் மற்ற புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. மார்க்ஸ் தத்துவத்தை பரப்ப நினைப்போர் இப்புத்தகங்களை படித்து மகிழலாம். நன்றி:தினமலர், 04 மார்ச் 2012.