நீதியின் குரல்

நீதியின் குரல் (பாகம் 2), டாக்டர் ஜஸ்டிஸ் ஏஆர். லெட்சுமணன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 10, நீதியின் குரல் (2ம் பாகம்): பக். 400, விலை ரூ. 750, The Judge Speaks (vol.II):        பக். 416, விலை ரூ. 800.

நீதி என்பது காலதாமதப்படுத்தாமல் உரிய நேரத்தில் உரியவர்க்கு வழங்கப்படவேண்டும். ஏன்? எதற்கு? அதற்கான பதில்கள்தான் நீதியரசர் ஏஆர். லெட்சுமணனின் ‘நீதியின் குரல்’ என்ற தலைப்பில் நூலாக்கம்  பெற்றுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் விளங்கிய டாக்டர் ஏஆர். லெட்சுமணன் கல்லூரிகள், நீதிமன்றங்கள் மற்றும் பல்துறை சார்ந்த நிகழ்வுகளில் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கமே ‘ நீதியின் குரல் – பாகம் 2’ ஆக வந்துள்ளது. ஆங்கிலத்தில் ‘The Judge Speaks’ (Vol.II) என்று நூலாக்கம் பெற்றுள்ளது. இவ்விரு நூல்களையும் குமுதம் பு(து)த்தகம் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்ட தீர்ப்புகளை உடனுக்குடன் வழங்கியவர் நீதியரசர். அந்த அனுபவங்களும் அதற்கான உழைப்பும் இந்த சமுதாயத்திற்கும் மாணவர்களுக்கும் சட்ட வல்லுநர்களுக்கும் பயன்படும் விதத்தில் இந்நூல் பதிவாக்கம் பெற்றுள்ளது சிறப்பு. நேர்முக வரியில் தொடங்கி, அனஸ்தீஸியா முதலான பல்வேறு துறைகளை அலசி ஆராய்ந்து நீதியரசர் வழங்கியிருக்கும் ஒவ்வொரு கருத்தும் தொலைநோக்குப் பார்வை கொண்டவை. நம் நாட்டின் இறையாண்மையை காக்கும் விதத்தில் ஒவ்வொரு குடிமகனும் நீதி என்பது என்ன, அதை உடனுக்குடன் வழங்கவேண்டியதன் அவசியம், காலதாமதமானால் என்னென்ன வேண்டத்தகாத நிகழ்வுகள் நடந்தேறும் நீதித்துறையின் மேல் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள உரிமைகள் என்று வாழ்வியலோடு நீதியைப் பொருத்திப் பார்க்கும் பார்வை  இந்நூலில் உள்ள 25 கட்டுரைகளிலும் உண்டு. நீதியரசர் ஆற்றிய கட்டுரைகளிலும் உண்டு. நீதியரசர் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இது என்றாலும், மூல உரை போன்றே தமிழாக்கம் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. ஒரு நீதியரசரின் உரை என்றாலும், சட்டம், நீதி என்ற வரையறைக்குள் மட்டுமே அடங்காது சமூகத்தின் எல்லா பிரிவுகளையும் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் என்பதால் அவை ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் குரலாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. படிக்கப் படிக்க புதிய சிந்தனைகள் துளிர் விடும் கருத்துக் கருவூலம் இந்நூல். குமுதம் பு(து)த்தகம் வெளியீட்டில் இந்நூல்கள் ஒரு மைல்கல்.   நன்றி: குமுதம் (10.4.2013).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *