திரை இசை அலைகள்
திரை இசை அலைகள் – ஐந்தாம் பாகம், வாமனன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108, விலை: ரூ. 250, பக்: 552.
ஒருவர் சினிமா இசைத் துறையைக் குறித்து எழுத வேண்டும் என்றால், முதலில் அவருக்கு இசையிலும், இலக்கியத்திலும் நல்ல ரசனையும், ஞானமும் இருக்க வேண்டும். அது இந்நூலாசிரியருக்கு நிறைவாக இருக்கிறது என்பதை இந்நூலைப் படிக்கும்போது அறிய முடிகிறது. தவிர, இவரால் இந்நூலில் எழுதப்பட்டுள்ள இசைக் கலைஞர்களில் பெரும்பாலோர் காலஞ் சென்றவர்கள், பெரிதும் பிரபலமாகாதவார்கள், மக்களால் மறந்து விட்டவர்கள். இவர்களைப் பற்றிய அரியத் தகவல்களை சேகரிப்பது என்பதும் மிக மிக கடினமான வேலை. அதையும் இந்நூலில் உணர முடிகிறது. ஒரு காலத்தில் பி.பி. ரங்காச்சாரியின் பாட்டுக்கு டி.எம்.எஸ். கோரஸ் குரல் கொடுத்தார். அந்த பி.பி. ரங்காச்சாரி தொடங்கி, அவ்வையார் பாடல்களுக்கு இசையமைத்த எம். டி. பார்த்தசரதி, ஏ. ஜி. ரத்னமாலா, வாணி ஜெயராம், எஸ்.பி. பாலசுப்பிரமணி, எம்.முத்து, மு. க முத்து என்று தொடர்ந்து மனோஜ் சியான், ரமேஷ் வினாயகம் வரை 26 இசைக் கலைஞர்களைப் பற்றிய விவரங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவர்களைப் பற்றியும், அவர்கள் பாடிய சிறப்பான பாடல்கள், அப்பாடல்கள் உருவான சூழல், அப்பாடல்களில் புதைந்து கிடக்கும் ராகங்கள்… என்று பலவற்றையும் ஆய்வு செய்து கட்டுரைகளாக வடித்துள்ளார் ஆசிரியர். கலைநயமும், ஆராய்ச்சி வளமும் கொண்ட இவரது இந்த நூல்கள், இத்துறையில் ‘முனைவர் பட்டம்’ பெற விரும்புகிறவர்களுக்கும் துணை புரியக்கூடும். நன்றி: துக்ளக் (10.4.2013).