ஈ.வே.கி. சம்பந்தும் திராவிட இயக்கமும்
ஈ.வே.கி. சம்பந்தும் திராவிட இயக்கமும், விவேகானந்தன், இனியன், சம்பத், கல்பனாதாசன், இனியன் சம்பத் பதிப்பகம், சென்னை 90, பக். 842, விலை 500ரூ.
திராவிட இயக்க மேடைகளில் நெருப்பாற்றில் நீந்தியவர்கள் நாங்கள் என்று ஒரு சொற்றொடர் அடிக்கடி இடம் பெறும். அதைச் சொல்லும் தகுதி உள்ள மிகச் சிலரில் ஈ.வெ.கி.சம்பந்த் ஒருவர் என்பதை இந்தப் புத்தகம் உணர வைக்கிறது. தினமணி கதிரில் 33 வாரங்கள் வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது. பெரியாரின் ரத்த உறவும், அண்ணாவின் நட்புறவும் இருந்தும்கூட திராவிட இயக்கத்தில் சம்பத் மறக்கப்பட்ட மனிதராக மாறியதற்குக்காரணம், தவறு செய்த வழிமாறிய தலைவர்கள் யாரையும் அவர் சந்தியில் நிறுத்தி கேள்வி கேட்காமல் விட்டதில்லை. ஆகவேதான் அவரை யாரும் நினைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் பல விவாதங்களில் அவர் எழுப்பிய பிரச்னைகள் இன்றைக்கும்கூட பேசுவதற்கு இடம் அளிப்பவை. 1953இல் அவர் எழுதி வெளியான முடிசாய்ந்தது (பிரெஞ்சு புரட்சி), நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அவரது எழுத்து நடைக்கு ஒரு சான்று. ஒரு வரலாறையும் வாழ்க்கையையும் இத்தனைச் சுவைப்பட எடுத்துரைக்க மிகச் சிலராலேயே முடியும். அங்கு (தி.மு.கவில்) சேர்ந்தவன்களில் சாதாரண நிலையில் இருந்தவர்களெல்லாம் 2 லட்சம் 3 லட்சம் சேர்த்துக் கொண்டு வாழ்கிறார்கள். ஆனால் சம்பத்தோ 2, 3 லட்சம் ரூபாய் வரை அழித்திருக்கிறான். அந்தக் கூட்டத்தில் சேர்ந்திருந்தும்கூட நாணயமாகவே இருந்திருக்கிறான். இதுவே எனக்கு மகிழ்ச்சி. 1961ஆம் ஆண்டு பெரியார் கூறிய இந்த வார்த்தைகளைவிட வேறு யார் பாராட்டி என்ன ஆகப்போகிறது. திராவிட இயக்க வரலாற்றின் அப்பட்டமான மீள்பார்வை இந்நூல்.‘ நன்றி: தினமணி, 22/4/2013.