விஸ்வரூபம்
விஸ்வரூபம்,இரா. முருகன், கிழக்கு பதிப்பகம், பக். 790, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-538-8.html
கமலும், இரா. முருகனும் ஒரே சமயத்தில் ஏகமாய் விசுவரூபத்திருக்கிறார்கள். கமல் ஹாலிவுட்டுக்காக தன் விசுவரூபத்தைக் காட்டியிருக்கிறார். இரா. முருகன் எப்போதுமான தன் விஸ்வரூபத்தை இந்தமுறை விரிவான களத்தில் அதிக பக்கங்களில் முன்வைத்திருக்கிறார். சுமார் 50 ஆண்டுகளில் (1889-1939) 50க்கும் மேற்பட்ட பாத்திரங்களின் நடமாடுதலில் நாவல் என்ற பெருங்கதை வடிவத்தில் தன்னை முன்னிருத்தியிருக்கிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட பாத்திரங்களை மையம் தவிர்த்தவர்களாக காட்டும் செயலும், மாந்திரீக யதார்த்த அம்சங்களும் இதை பின்நவீனத்துவ அம்சங்களைக் கொண்டதாக்குகிறது. ஆண் பெண் கலவி அம்சம் குறித்து வழமையான விஷயங்களில் சிந்திப்பவரல்ல இரா. மு. முன் காலத்திய நடைமுறை அம்சங்களை கைக்கொள்ளமால் இயல்பான விஷயமாகச் சித்தரிப்பவர். பிறருக்கு அது பிறழ்வாகக் கூடப்படலாம். ஆனால் அந்தப் பிறழ்வை சரியாகச் சித்தரிப்பதில் அக்கறை கொண்டிருப்பவர். பிராமணர்களைப் பற்றிய சித்தரிப்பில் தேர்ந்த நுணுக்கம் தென்படுகிறது. விவிலியத்தை வேத ஆகமமாகக் கொண்ட கிறிஸ்துவத்தில் ஏறிய பிராமணக் குடும்பத்தில் வந்தவனாக, பூணூல் போடாமல் இருக்கிறான் வேதய்யன். வேதத்தில் ஏறிய பிராமணனுக்கு என்னத்துக்குங்காணும் நூலும் மற்றதும்.‘ மலையாளிகளின் பார்வையில் தமிழர்கள் பற்றிய கிண்டல்கள் விரவிக்கிடக்கிறது. பாண்டி பாண்டி என்று கூவுகிறது. பாண்டித்தமிழ் புரியாத பாஷை என்றாகிறது. காலம் பற்றிய நுணுக்கமான குறிப்புகள் அங்கங்கே விரவிக் கிடக்கின்றன. காலம் முன்னும் பின்னுமாக நகர்ந்து பல கண்ணிகளை ரகசியக்குறிப்புகளுடன் வெளியிடுகிறது. கடிதங்கள், பத்திரிக்கையாளர்களின் குறிப்புகள் (ஸ்காட்லாண்ட பாலம் அமைப்புப் பணியில் இளவரசன் எட்வர்ட் பயணமும் அதை பத்திரிகை செருக்கும் முறைகளும்) இன்னும் சுவாரஸ்யப்படுத்துகின்றன. பழகியவர்களும் செத்துப்போனவர்களம் திடுமென வந்து விளையாட்டு காட்டுகிறார்கள். ஆவிகளோடு பலர் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். லண்டனில் ஆவிகள் உலாவும் இடத்திற்கும் சுற்றுலா போகிறார்கள். இது மாயா தத்துவத்துக்கும் கடைசியில் காசிக்கும் எல்லோரையும் தள்ளிக்கொண்டு போகிறது. மகாலிங்கய்யனை கடிதங்களில் புலம்ப வைக்கிறது. மாந்திரீக யதார்த்தவாதத்தின் சுவையை உணர இனி ஆங்கில நாவல்களையோ, மொழிபெயர்ப்புகளையோ நாட வேண்டியதில்லை. இது ஒன்றே போதும் என்கிறது நாவலின் பின் அட்டைக்குறிப்பு. மகாலிங்கய்யன் தறி கெட்டு ஓடுவதில் மதராஸ் பட்டணம், புதுச்சேரி, கரும்புப்பிரதேசம், லண்டன், கேரளா என்று திரிகிறதற்காக வலிந்து அலைக்கழிக்கப்படுவதாகவே தோன்ற வைத்து விடுகிறது. பாலியலும் உறவுகளிலும் ஓரினப்புணர்வு முதல், சேர்ந்து வாழும் நபர்கள் வரை வகைவகையாய் காட்டப்பட்டிருக்கிறது. கேரள பிராமணியமும், கிறிஸ்துவமும் ஒன்றாக ஊடாடி நாவல் முழுவதும் அலைகிறது. அது சார்ந்த மொழியும் கலாசார அம்சங்களும் கொண்டு நிறுவப்பட்டிருக்கிறது. அதற்காக உபயோகப்படுத்தப்படும் மொழியில் கலப்படம் சுலபமாக உலாவி வாசிக்கும் தமிழ் உணர்வாளர்களை சங்கடப்படுத்துகிறது. நவீன மொழிப் பயன்பாட்டில் கலப்படம் உச்சத்துக்குப் போய்விடுகிறது. இதில் தென்படும் பெண் படிமங்கள் உண்மையானதாகவும் கனவாகவும் இருக்கிறது. இந்திய சமூகத்தின் அந்தக் கால மதிப்பீடுகளை பிரதிபலிக்கக்கூடியவை என்றாலும் 50 ஆண்டுகள் கழித்து இன்னும் அதேபோல் நிலைத்துவிட்டதையும் காணலாம். இரா. முருகனின் முந்தைய நாவல்களான மூன்று விரல், அரசூர் வம்சம் போன்று வெகு கவனத்தில் கொள்ளும்படியானது இந்த நாவல். குடும்ப அமைப்பில் இருந்து துண்டாடப்பட்ட மனிதர்களின் தனிமை உலகங்களை இந்நாவல் விசுவரூபித்துக் காட்டுகிறது. -சுப்ரபாரதிமணியன். நன்றி :ஆழம், மார்ச் 2013.
