பெண்எழுத்து

பெண்எழுத்து, இரெ. மிதிலா, அடையாளம், புத்தாநத்தம் 621310, பக். 224, விலை 150ரூ.

எழுத்துலகில் பெண்கள் எப்படி நுழைந்தனர்? அவர்கள் எழுத்துலகில் நுழைந்த காலகட்டத்தின் சமூகச் சூழல் எப்படி இருந்தது? என்பன போன்ற பல்வேறு நுட்பமான தகவல்கள் நிறைந்துள்ள நூல். பெண் எழுத்தாளர்கள் குறித்த ஆய்வாக இருந்தாலும், சமூகத்தில் அவர்கள் நடத்தப்பட்டவிதம், அவர்களது முக்கியத்துவம் எனப் பல தகவல்களையும் நூல் உள்ளடக்கியிருப்பது பாராட்டுக்குரியது. எனினும் இருபதாம் நூற்றாண்டில் குறிப்பிட்ட மதத்தினர் வந்த பிறகே பெண்கள் அதிகம் எழுதத் தொடங்கினர் என்பது போன்ற சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை. ஔவையாரும் இன்னபிற சங்க காலப் பெண்பாற்புலவர்களும் பிரபலமாகவே இருந்துள்ளனர், என்றாலும் நூலின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தில் பெண் எழுத்தாளர்கள் அரிதாகவே இருந்துள்ளனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. இலக்கியம், அறிவியல், மருத்துவம், ஆன்மிகம், திரைப்படக் கலைகள் எனப் பல்வேறு கோணங்களில் பெண் எழுத்துகளை அலசி ஆராய்ந்திருப்பது பாராட்டத்தக்கதாக உள்ளது. மேலும் பெண் எழுத்தாளர்களது பங்களிப்பை அவர்களின் வளர்ச்சி விகிதத்தை ஆய்வு நோக்குடன் வரைபடம் மூலமாகக் காட்டியிருப்பது மற்ற நூல்களிலிருந்து இந்நூலை மாறுபட வைத்துள்ளது. வருங்காலங்களில் பெண் எழுத்துகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்புவோருக்கும், பெண் மேம்பாடு குறித்து பேசுவோருக்கும் ஒரு வழிகாட்டியாக இந்நூஙல் அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.  

—-

காமகோடி பெரியவர், சாருகேசி, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 152, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-832-7.html

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த காஞ்சி மகா பெரியவர் சாதாரண மக்களுக்கு எவ்வளவோ உதவிகளைச் செய்தவர். அவருடைய அளவற்ற கருணையை அனுபவரீதியாக உணர்ந்தவர்கள் இந்த நூலில் அவற்றைப் பகிர்ந்துள்ளனர். குறிப்பாக காஞ்சி மகா பெரியவருடன் நெருங்கிப் பழகிய லஷ்மி நாராயணன். மேற்கு மாம்பலம் பட்டு சாஸ்திரிகள், துறவி பட்டாபி, எழுத்தாளர் அகிலா கார்த்திகேயன், பெருங்களத்தூர் பெரியவர் காமாட்சிதாசன், சீனிவாசன் எனப் பலரைச் சந்தித்து இந்த நூலை எழுதியுள்ளார் சாருகேசி. படிக்கும்போது இவை எதுவுமே பழங்கதையாக அல்லாமல் நம் கண் முன்னால் நடப்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. காஞ்சி மகா பெரியவரின் இளமைக்காலம் முதலான அரிய, அபூர்வ புகைப்படங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில் காஞ்சி மகா பெரியவரைப் பற்றி மிக ஆழமாக அறிந்து கொள்ள உதவும் நூல். நன்றி: தினமணி 19/12/2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *