நானா போனதும் தானா வந்ததும்
நானா போனதும் தானா வந்ததும், பாக்கியம் ராமசாமி, வானதி பதிப்பகம், விலை 100ரூ.
ஜாம்பஜார் ஜக்கு சிரிப்பு மருந்து, தினமும் இரண்டு வேளைகள் என்னும் குறிப்போடு முப்பத்தெட்டுவிதமான வைத்தியங்கள். போதாக்குறைக்கு தொழில்முறை டாக்டர் ஒருவரே (டாக்டர் என். சுந்தர்) அணிந்துரை தந்திருக்கிறார். சிரிப்பு வைத்திய நிபுணர் பாக்கியம் ராமசாமியின் நானா போனதும் தானா வந்ததும், நூலுக்குத்தான். பாக்கியம் ராமசாமியிடம் உம்மணா மூஞ்சிகூடத் தோற்றுப் போய்விடுவான் என்று கல்கி. ராஜேந்திரன் முன்னுரைப்பதை கிராப்பைக் கலைக்க இருநூரு ரூபாயா? கட்டுரை ஒன்றே நிரூபித்து விடுகிறது. தாத்தா தம்முடைய வாலிப நாட்களில் பெற்ற அனுபவத்தைச் சொல்கிற கதை முன்ஜாக்கிரதை. அந்த நாளில் இவர் கொஞ்சம் கூடுதல் கொழுப்போடு இருந்தாராம். எடிட்டர் பராக் கட்டுரை அடக்கமாக இருப்பதிலும் உள்ள அபாயத்தை உணர்த்துகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. ஜாலியாகப் படிக்கலாம்.
—-
அகமும் புறமும், கீதா, புதிய தலைமுறை வெளியீடு, விலை 80ரூ.
சொந்தத்தில் ஒரு வீடு என்பது பலருக்கும் கடைசிவரை நிறைவேறாத ஒரு கனவாகவே நின்றுவிடுகிறது. முறையான திட்டமிடல் இருந்தால் ஒரு நல்ல வீட்டை உருவாக்கிவிட முடியும் என்னும் நம்பிக்கையைத் தருகிறது அகமும் புறமும் என்னும் இந்த நூல். மிரட்டுகிற மின்சார வெட்டைக்கூடச் சமாளிக்கும் விதமான மாற்று வழிகளையும் விளக்குகிறார் ஆசிரியர். வீடு என்பதன் அடிப்படைத் தேவையே நல்ல வெளிச்சமும் காற்றும்தானே? வங்கிக்கடன்கள் காப்பீட்டு வசதிகள் எல்லாவற்றையும் விளக்குவது போலவே வீட்டைச் சுற்றிலும் பசுமையான சூழலை உருவாக்குவதன் அவசியத்தையும் விளக்குகிறார். 1200 சதுர அடி நிலம் கிடைத்தால் போதும். அழகாக ஓர் ஆதர்ச இல்லத்தை எப்படி உருவாக்கலாம் என்பதற்கு இந்தக் கையேடு உதவும். உலகில் எந்த மூலைக்குப் போனாலும் எப்போது நம் வீட்டுக்குப் போவோம் என்று தோன்ற வேண்டும் என்பதை நூலாசிரியர் முன்னுரையில் சொல்லியிருப்பது வீடுகட்டவிரும்புகிறவர்கள் கவனத்துக்கு உரியது. சுற்றிலும் 300 சதுர அடி இடம் விட்டு 800 சதுர அடி தரைத்தளத்தில் வீடு என்பது இவர் காட்டுகிற வழி. சுற்றிலும் உள்ள இடத்தில் வேப்பமரம், தென்னைமரம், தவிர காய்கறிச் செடிகளையும் வைக்கலாம் என்பதைப் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. பதினைந்து கட்டுரைகள். வீட்டுக் கனவில் உள்ளவர்கள் படித்துப் பயன் பெற வேண்டிய நூல் இது. -யெஸ்பால். நன்றி: கல்கி 7/4/2013.