தேவதாசியும் மகானும்
தேவதாசியும் மகானும், வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம், தமிழில் பத்மா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-814-3.html
தேவதாசிகள் என்று ஒரு குலம் உருவாக்கப்பட்டு சென்று நூற்றாண்டின் முன்பாதியிலேயே ஒழிக்கப்பட்டும் விட்டது. சங்கீத உலகில் அரும்பாடுபட்டுத் தமக்கென்று தனியிடம் அமைத்துக் கொண்ட பெங்களூரூ நாகரத்தினம்மா அந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவர். நெஞ்சை உலுக்கி நிமிர வைக்கும் அவருடைய வாழ்க்கை வரலாறை தேவதாசியும் மகானும் என்ற தலைப்பில் வி.ஸ்ரீராம் ஆங்கிலத்தில் வெளியிட்டதை அழகாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் பத்மா நாராயணன். விறுவிறுப்பான அதிர்ச்சி தரும் பல செய்திகளை உள்ளடக்கிய இந்த நூலின் கடைசி வரிகளை மாலன் எழுதிய கவிதை வரிகேளாடு நிறைவு செய்திருப்பது ஒரு முழுமையைப் புலப்படுத்துகிறது. அரசர்கள் இவனைப் போற்றனார்கள் வித்வான்கள் இவனை விற்றுப் பிழைத்தார்கள் ஆனால் ஒரு தாசியல்லவோ இவனுக்குக் கோயில் கட்டினாள்? சங்கீத ஜாம்பவான்கள் ஆண்டுக்கு ஒருமுறைகூடிக் குதூகலிக்கும் திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகளுக்கு சமாதி எடுப்பித்தவர் பெங்களூரு நாகரத்தினம்மாள். சுவாமிகளின் சமாதிக்கு எதிரிலேயே இவருடைய சமாதியும் இருக்கிறது. 1927ஆம் ஆண்டில் மதராஸில் நடக்க இருந்த காங்கிரஸ் கூட்டத்தோடு அகில இந்திய சங்கீத சம்மேளனமும் நடைபெற்றது. அதில் சென்னை மாகாணத்திலிருந்து பங்கேற்றவர், தேவதாசி மரபில் வந்த பெங்களூரு நாகரத்தினம்மாவும் ஒருவர். பண்டிட் விஷ்ணு திகம்பர் என்னும் ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் அம்மையாருக்குத் தங்கப் பதக்கம் பரிசாக வழங்கிப் பாராட்டினார். சம்மேளனம் வெற்றிகரமாக நடந்து அதன்மூலம் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டுதான் மியூஸிக் அகாமதமி நிறுவப்பட்டது. ஆனால் ஒருமுறைகூட நாகரத்தினம்மாவை இநத் மதிப்பு வாய்ந்த நிறுவனம் பாட அழைத்ததில்லை போன்ற சங்கீத உலகைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களும் உடைய ஒரு பக்கம் விடாமல் அவசியம் படிக்க வேண்டிய நல்ல நூல். -யெஸ்பால். நன்றி; கல்கி, 14/4/13.
—-
ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும், டாக்டர் கே. ஆர். விட்டல்தாஸ், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை 450ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-015-5.html
திருமாலை முழு முதற் கடவுளாகக் கொண்டது வைணவம். இதன் ஆன்மீகக் கருத்துக்களை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்ற பக்தி இலக்கியமாக தமிழுக்குத் தந்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். இவர்களையும், வைணவ மார்க்கத்தின் பல விஷயங்களையும் ஆய்வுரீதியில் இந்நூல் விவரிக்கிறது. சுமார் 800 பக்கங்களுக்கு மேல் விரியும் இந்நூல் 16 இயல்களாகப் பகுக்கப்பட்டிருக்கிறது. முதல் இயலில், நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தின் சிறப்பு, வைணவ பக்தி இலக்கியத்தில் ஆழ்வார்களின் பங்களிப்பு, தமிழகத்திலிருந்து வடமாநிலங்களுக்கு பக்தி மார்க்கம் பயணித்த விதம்… என்று பல விஷயங்கள் ஆழமாக ஆராயப்பட்டுள்ளன. இரண்டாவது இயலில் பாகவதப் புராணம் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மூன்றிலிருந்து ஆறு வரை, பன்னிரு ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் பக்தி சாதனை, திவ்ய பிரபந்தத்தின் இலக்கிய நயம், என்று அவர்களின் பக்தி சாதனை, திவ்ய பிரபந்தத்தின் இலக்கிய நயம் என்று பல விஷயங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. 7லிருந்து 14 வரையிலான இயலில், பிற மாநில மொழிகளிலுள்ள வைணவ இலக்கியங்களையும், அவற்றை இயற்றியவர்களின் வாழ்க்கை வரலாறுகளும் தொகுக்கப்பட்டுள்ளன. 15ஆவது இயலில் வால்மீகி இராமாயணம், கம்பராமாயணம் மற்றும் இந்திய மொழிகளிலுள்ள மற்ற ராமாயணங்களையும், அவற்றை இயற்றியவர்களைப் பற்றிய சரித்திரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. 16ஆவது இயலில் இந்திய வைணவ இலக்கியங்களில் காணப்படும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்து ஆராயப்பட்டுள்ளது. இப்படி நூலாசிரியரின் கடும் உழைப்பில் உருவான இந்நூல் வைணவ பக்தர்களுக்குப் பெரிதும் பயன் தரத்தக்கது. -பர்க்கத் நன்றி: துக்ளக் 17/4/2013.