சாலப்பரிந்து
சாலப்பரிந்து, நாஞ்சில்நாடன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 1, பக். 240, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-3.html
தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளின் தொகுப்பு. கிராமம், நகரம், பயணம் இந்த மூன்ற பின்னணிகளில் பெரும்பாலான கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையிலுமே அந்தக் கதை நடக்கும் சூழல் குறித்த ஏராளமான தகவல்களை அளிக்கிறார் நூலாசிரியர். சிறுகதைக்கு இவ்வளவு தகவல்கள் தேவையா? என்ற எண்ண அலை நமக்குள் எழும்போதே, அரிசியில் எத்தனை வகைகள், பழங்காலத்தில் நம்மிடம் வழக்கத்தில் இருந்தன. மீன் வளங்கள் எவ்வளவு இருந்தன, என்பனவெல்லாம் வெறும் தகவல்கள் என்னும் நிலையைக் கடந்து ஆவணங்களாக விரிகின்றதே என்னும் எண்ணம் எழுதுகிறது. கதைகளைப் படிக்கும்போது அதிர்ச்சி, நெகிழ்ச்சி, கழிவிரக்கம், நகைச்சுவை, சோகம், துணிச்சல், ஆற்றாமை இப்படி பலவித உணர்ச்சிகளின் தொகுப்பாய் நாம் ஆகிப் போவதைத் தவிர்க்க முடியவில்லை. கும்பமுனியைப் பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு வடிக்கப்பட்டிருக்கும் கதைகளில் வங்கணத்தின் நன்று வலிய பகை கதை, மஞ்சள் எழுத்தை ஊக்குவிக்கும் பதிப்பாளர்களுக்கு சரியான சாட்டையடி. நுனிப்புல்லாக மேயாமல் ஆழமாகப் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. நன்றி: தினமணி, 27/5/13.
—-
சிபி, ஏ.ஏ.ஹெச்.கே.கோரி, இருவாட்சி, விலை 170ரூ.
தமிழ்நாட்டு அரசியல், அதுவும் சுதந்திரம் பெற்ற பிறகு பட்ட, பட்டு வருகிற, இனியும் படப்போகிற அவலத்தை அப்படியே, பெயர் சொல்லியே கிழித்துக் கூறுபோடுகிறார் அரசியல் நாவலில். ஏ.ஏ.ஹெச்.கே.கோரி இந்த நாவலில் ஒரு காட்சியில் ஹோட்டலைத் தேடிச் செல்கிறபோது தலைவர் கேட்கிறார். இங்கே ஒரு ஹோட்டல் இருக்கிற மாதிரி இருக்கே, ரொம்பக் கூட்டமா இருக்குமோ. ரோட்லே ஒரே பைக்கா இருக்கே? ரோட்லே ஒரே பைக்கா நின்னா அது ஹோட்டல் இல்லே தலைவா, அதுக்குப் பேரு டாஸ்மாக் என்ற பதில் வருகிறது. அளவோடு ஆசைப்பட்டால் ஆனந்தமாய் வாழலாம். அத்தனைக்கும் ஆசைப்பட்டால் மதுரை ஆதீனமாகலாம் என்று ஒரு கிண்டல். ஹிந்தி எதிர்ப்புக் கலவரத்தை அன்றைக்குத் தூண்டிவிட்டவர்கள், அவர்களின் வாரிசுகள் எல்லாம் இன்றைக்கு ஹிந்தியோடும் ஹிந்தியர்களோடும் சமரசம் செய்துகொண்டு… விமானத்தில் ஜீவிக்கிறார்கள். சி.பி. என்பது சிறுபான்மையினர் பிரிவுத் தலைவர் என்பதின் சுருக்கம்தான். படிப்பதற்குச் சுவையாக இருந்தாலும் பிற்பகுதியில் நாவலின் தன்மை தொய்வடைகிறது. இந்த நாவல், ஆசிரியர் பல விஷயங்களைக் குமுறிக் கொட்ட ஒரு களமாக அமைந்தது என்பதைத் தவிர என்ன பயன்? பின் அட்டையில் பிரகடனம் செய்திருக்கிற மாதிரி மிச்சமெல்லாம் கனவுகள் என்றான பிறகு வேறென்ன சொல்ல? அவசியம் படித்து ஆன்ம சுத்தி பெறலாம். அப்படி ஒன்று இருப்பவர்கள் மட்டும். நன்றி: கல்கி, 14/4/13.