ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள்
ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள், தோராளிசங்கர், சென்னை புக்ஸ், சென்னை 91, பக். 488, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-9.html
அமைதி, சமாதானம், காருண்யம் ஆகியவற்றை நேசிக்கும் மானுடர்களுக்கு வேப்பங்காயாகக் கசப்பது ஹிட்லர் என்ற வார்த்தை என்றால் அது மிகையில்லை. கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த 2ஆம் உலகப் போருக்கு வித்திட்டவர் ஜெர்மன் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் என்பது மட்டுமே அதற்குக் காரணமல்ல. சுமார் 5 கோடி பேரை காவு வாங்கியதாகக் கூறப்படும் இரண்டாம் உலகப்போரின் மூலம் உலகப் பேரரசு என்ற ஒன்றை அமைக்க வேண்டும் என்ற அவரது பேராசைதான் இதற்கெல்லாம் முதற்காரணம். இரண்டாவது உலகப் போர் மூன்று முனைகளில் வேறுபட்ட நபர்களால் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் ஐரோப்பாவில் முதன் முறையாக அதைத் தொடங்கி வைத்தது ஹிட்லர்தான். இது போன்ற தகவல்கள் ஒருபுறம் இருந்தாலும் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் போன்ற நேச நாடுகளை தனது கடற்படை சாகஸத்தால் மிரட்டிய ஹிட்லரை நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்? இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் கடைப்பிடித்த போர்த்தந்திர முறைகள் கடற்படை உத்திகள் ஆகியவற்றை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல். எளிய தமிழ் நடையில் வாசிக்க இயல்பாக இருக்கும் வகையில் எழுத்தைக் கையாண்டிருக்கிறார் நூலாசிரியர். கடற்படையில் கோலோச்சியி பிரிட்டிஷ் கடற்படையினரைக் குலைநடுங்கச் செய்யும் வகையில் ஜெர்மானிய கடற்படையின் சாகசங்கள் பட்டியலிடப்படுகின்றன. இந்நூலில் அடால்ஃப் ஹிட்லர் குறித்தும், இரண்டாம் உலகப் போர் மூண்ட வரலாறு, ஜெர்மானியக் கடற்படையின் வளர்ச்சி, முதல் கட்டக் கடற்போர்கள், கடற்சுரங்க வெடிகள், ஜெர்மன் நாசகாரிக் கப்பல்கள், ரிவர்பிளேட் அருகே கடற்போர், பழிசுமந்த சிறைக் கப்பல், நார்வே மீது படையெடுப்பு, அட்லாண்டிக் போர், மத்திய தரைக் கடற்போர், ஆர்க்டிக் போர், ஜெர்மன் கடற்படையின் தோல், ஹிட்லரின் இறுதி நாள்கள் என 18 தலைப்புகளில் பல்வேறு விஷயங்கள் அலசி ஆராயப்பட்டுள்ளன. ஹிட்லர் பற்றியும் இரண்டாம் உலகப் போர் பற்றியும் தொடர்பான பல விஷயங்கள் படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அன்றாடப் பேச்சு மொழி நடையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளமையால் எளிமையும், தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தையும் தூண்டும் இயல்பும் படிப்பவரைக் கவர்பவையாக உள்ளன. போரைப் பற்றிய நூலை போர் அடிக்காத வகையில் ஆசிரியர் படைத்துள்ளார் என்று அணிந்துரையில் க.த.திருநாவுக்கரச கூறியுள்ளது உண்மை. நன்றி : தினமணி, 6/5/13.
—-
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், முனைவர் த.கோவேந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பாகம் 1-768 பக். பாகம் 2-648 பக். இரண்டு நூல்களின் விலை 850ரூ.
திருமால் மீது கொண்ட பக்தியில் ஆழ்ந்து விட்டவர்களான ஆழ்வார்கள் பன்னிருவரால், நூற்றெட்டு திருப்பதிகளில் கோவில் கொண்டுள்ள பெருமாளைப் பாடிய பக்திப் பாடல்களே, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். பாசுரங்களுக்க எளிய நடையில் பொருளை உணர்த்தும் கருத்துரையை வரைந்துள்ளார் முனைவர். த.கோவேந்தன். ஆழ்வார்களின் பாசுரங்களில் இலக்கியச்சுவை, இயற்கை வருணனை, உவமை முதலிய அணிகள் சிறப்புடன் நிறைந்துள்ளன. ஆழ்வார்கள் பன்னிருவரின் வரலாறு, தசாவதாரக் கதைகள், தொடர்புடைய பிற கதைகள், பெரியவாச்சாண் பிள்ளை தொகுத்துள்ள பாசுரப்படி ராமாயணம் முதலிய சிறப்பான முறையில் கொடுக்கப்பெற்றுள்ளன. படிப்பதற்கும், பாடுவதற்கும் ஏற்ப அச்சிடப் பெற்றுள்ளமையால், முன்னரே பாசுரங்களில் பயிற்சியுடையோர்க்கும் புதிதாய் கற்போருக்கும் இந்நூல் பயனளிக்கும். தெய்வ மணமும், இலக்கிய மணமும் கமழும் மிகச் சிறந்த பக்தி இலக்கிய நூல். -பேரா. ம.நா. சந்தானகிருஷ்ணன். நன்றி: தினமலர் 2/6/13.