இராமன் எத்தனை இராமனடி
இராமன் எத்தனை இராமனடி, அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக். 232, விலை 175ரூ.
உலக நாடுகள் எங்கும் பரவிக்கிடக்கும் பெருமை மிக்கது ராமாயணம். ராமன் இந்திய தேசத்துக்கு மட்டும் சொந்தமல்லன். உலக நாடுகள் எங்கும் ராமன், சீதை கதைகள் பரவிக்கிடக்கின்றனஎன்பதையும், இவர்கள் தெய்வங்களாய் வணங்கப்படுகின்றனர் என்பதையும் இந்த ஆய்வு நூலில் அ.கா. பெருமாள், அருமையாகத் தீர்வு செய்துள்ளார். பாரட்டத்தக்கது. ராமாயணம் வழி பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, நாடோடிக் குழுநடனம் ஆகிய பழங்கலைகளும் வளர்ந்துள்ளதை, இந்நூல் தெளிவாக்கி உள்ளது. ராமன், அம்பின் நுனியில் மண் உருண்டையால் கூனியின் கூன் முதுகில் அடித்தது, அகலிகையை கல்லாக மாற்றியது போன்ற பல அதிரடி மாற்றங்களை கம்பர், புதிதாக செய்துள்ளார் என்பதும், வால்மீகியில் இவை இல்லை என்பதும் போன்ற பல புதிய செய்திகள் உள்ளன. மைதிலி, அவதி, பாகவி, கன்னூஜி போன்ற இந்திய மொழிகளில் வாய்மொழியாக ராமாயணம் உலா வருகிறது. தெலுங்கில் பாஸ்கர கவியும், மலையாளத்தில் எழுத்தச்சனும், தமிழில் கம்பனும் ராமாயணத்தை வழங்கியுள்ளனர். பவபூதி ராமாயணம் உத்திரகாண்டத்தில் சீதையையும், ராவணனையும் சேர்த்துக் காட்டி முடிக்கிறது. ரிக்வேதத்தில் தசரதன், ராமன் பெயர்கள் உள்ளன. சங்க இலக்கியங்களான புறநானூறு, பரிபாடல், அகநானூறு, மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகியனவற்றில் ராமாயணச் செய்திகள் உள்ளன. கிறிஸ்து காலத்திற்கு முன்பே ராமாயணம், கதை வழக்கில் உள்ளதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இலங்கை, தாய்லாந்து, மலேசியா, ஜாவா, பர்மா, பிலிப்பைன், வியட்நாம், கம்போடியா, திபெத், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ராமாயணம் வழக்கத்தில் உள்ளது. கலைகள் வடிவங்களாகவும், கதைகள் வடிவங்களாகவும் வெளிப்படுகின்றனர் ராமனும் சீதையும். சமணமதமும், புத்தமதமும் ராமனை ஏற்றுக் கொண்டன. ராம சீதா கதா தசரத சதம் என்னும் சிங்கள நூல் புத்தகம் இலங்கையில் செல்வாக்கு பெற்றது. மலேசியாவில் லட்சுமணன் மாபெரும் தியாகியாகப் போற்றப்படுகிறான். சிங்களர் விபீஷணனை கடவுளாக வணங்குகின்றனர். தாய்லாந்து ராமாயண நடனம் மிகவும் புகழ்பெற்றது. பர்மிய மொழியில் 1751ல் மாங்டோர் ராமாயணத்தை மொழிபெயர்த்துள்ளார். ஜைன ராமாயணம் மாறுபட்ட கதையமைப்பு கொண்டதாய் உள்ளது. தோல்பாவைக் கூத்திற்கு உயிர் தந்தது ராமாயணக் கதையாகும். கோசலையை திமிங்கலம் காத்த கதை உட்பட வாய்மொழி ராமாயணக் கதைகள், வட்டாரங்கள் பலவற்றில் வழங்குவதைத் தேடி தொகுத்துத் தந்துள்ளது படிப்பவருக்கு பரவசம் தருவதாய் உள்ளது. உலக அரங்கில் அதிகம் போற்றப்பட்ட காவியநாயகன் ராமனைப்போல் வேறு யாருமே இல்லை என்பதை கூறி, ஒப்புமை அற்ற இந்த நூல் முத்திரைப் பதிக்கிறது. -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 16/10/11.