சித்தர்கள் கண்ட விஞ்ஞானம்
சித்தர்கள் கண்ட விஞ்ஞானம், தத்துவம் சாமி சிதம்பரனார், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை 14, பக். 142, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-807-4.html
சித்தர்கள் என்றதும் சித்த வைத்தியம் பதினெண் சித்தர்கள், கூடு விட்டு கூடு பாய்தல் உள்ளிட்ட எண் வகைச் சித்தர்கள், அற்புதங்களைச் செய்யக் கூடியவர்கள் என்ற வகையில்தான் எண்ணங்கள் ஓடும். ஆனால் சாமி சிதம்பரனார் எழுதியுள்ள சித்தர்கள் கண்ட விஞ்ஞானம், தத்துவம் என்ற நூலைப் படிக்கும்போது சித்தர்களின் பல்வேறு குணாதிசயங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. மக்கள் சமுதாயம் இனம் ஒன்றே. மக்களிடையே பிரிவினை பேசுதல் கூடாது என்பது சித்தர்களின் கொள்கை. சித்தர்கள் சிறந்த அறிவியலாளர்களாகவும், மருத்துவ மேதைகளாகவும், மதச் சார்பற்றவர்களாகவும், மூட நம்பிக்கைகளைக் கடுமையாகச் சாடும் பகுத்தறிவாளர்களாகவும் விளங்குவதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. நீண்ட நாள் உடல் வலிமையுடன் வாழ யோகப் பயிற்சி அவசியம். உள்ளத்தில் எள்ளளவாவது அன்பில்லாதவர் முக்தி அடைய முடியாது என்பது சித்தர்களின் வாக்கு. சிந்தனையைத் தெளிய வைக்கும் நல் முத்துக்கள் இந்நூலில் கொத்துக் கொத்தாய் கிடக்கின்றன. நன்றி: தினமணி, 7/7/13.
—-
மெமரி பூஸ்டர், லதானந்த், விகடன் பிரசுரம், பக். 128, விலை 70ரூ.
நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான எளிய வழிகளை விளக்குகிறது இந்நூல். இது பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பயன்படக்கூடியது. ஞாபக சக்தியை மேம்படுத்துவதற்கான பல்வேறு பயிற்சிகளை சிபாரிசு செய்யும் இந்நூல், சிறந்த உணவுப் பழக்கத்தையும் நமக்குக் கற்றுத் தருகிறது. நினைவாற்றலை அபரிமிதமாய் பெருக்கும் உணவு வகைகளை நூலாசிரியர் பட்டியலிட்டுள்ளார். அடையாளங்களை உருவாக்கி அதன் மூலம் ஒவ்வொன்றையும் மனதில் பதித்துக் கொள்ளும் உத்தியை விளக்குகிறது. நினைவாற்றல் தொடர்பாக அதிகம் பேசப்படுகிற நிமோனிக்ஸ், அக்ரோனியம் உத்திகளை எளிய முறையில் எடுத்துரைத்து பள்ளிப் பாடங்களை நினைவில் வைத்துக் கொள்ள மாணவனுக்கு வழிகாட்டுகிறது. எண்சாண் உடம்புக்கு மூளையே பிரதானம். மூளையின் மகிமை அதன் நினைவாற்றலில் அடங்கியிருக்கிறது. அதனை விஞ்ஞானபூர்வமாக மேம்படுத்துவதற்கு உதவும்வகையில் இந்நூல் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. நினைவாற்றலுக்கான சத்துணவு அதற்கான உடற்பயிற்சி நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான பிரத்தியேகப் பயிற்சி என 3 தளங்களில் இந்த நூல் விரிகிறது. னைவாற்றல் மேம்பாடு தொடர்பாக எழுதப்பட்டுள்ள தமிழ் நூல்களுள் இந்தப் புத்தகத்துக்குத் தனி இடம் உண்டு. நன்றி: தினமணி, 7/7/13.